சென்னை :
சென்னை ஐ.ஐ.டி.,யில் சமஸ்கிருதத்தில் இறைவணக்கப் பாடல் பாடப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. வைகோ, பழ.நெடுமாறன், திருமுருகன் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.,யில் தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சமஸ்கிருத மொழியில் இறைவணக்கம் பாடப்பட்டது.
பொதுவாக மத்திய அரசு நிறுவன விழாக்களில் தேசிய கீதம் இசைக்கப்படுவதுதான் மரபாகும். ஆனால், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஐ.ஐ.டி.,யில் தேசிய கீதத்துக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் இறை வணக்கம் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, “சமஸ்கிருதத்தில் பாடல் பாட காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணனும் கட்கரியும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழர் தேசிய முண்ணனியின் தலைவர் பழ.நெடுமாறன் , “சென்னை ஐ.ஐ.டி.,யில் வேண்டுமென்றே சமஸ்கிருதத் திணிப்பை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் செயல் இது. தமிழகத்தில் எப்படியாவது சமஸ்கிருதத்தை புகுத்த வேண்டும் என்கிற நோக்கில் மத்திய அரசு செயல்படுவது கண்டிக்கத்தது” என்று தெரிவித்துள்ளார்.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, “ சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் தொடர்ந்து தமிழ் விரோதப்போக்கை கடைபிடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் ஐ.ஐ.டி வளாகத்திற்கு மின்சாரம், குடிநீர் போன்ற வசதிகள் வழங்கப்படக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.