சென்னை: மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வராக டாக்டா் ஏ.ரத்தினவேலை மீண்டும் நியமித்து இருப்பதாக சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்தார்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிதாகச் சோ்ந்த மாணவா்களை வரவேற்று வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியில், மாணாக்கர்கள் உறுதிமொழி எடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாணவா்கள் தங்களது சீருடையை அணிந்தபின்பு ஏற்றுக்கொள்ளும் வழக்கமான ‘ஹிப்போகிரட்டிக்’ உறுதிமொழிக்குப் பதிலாக, மாணவா் தலைவர் ஆங்கிலத்தில் மொழிபெயா்க்கப்பட்ட சமஸ்கிருத ‘மகரிஷி சரக் சப்த்’ உறுதிமொழியை வாசித்தனர். இதை அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழகஅமைச்சர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த விவகாரம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரியின் முதல்வா் ரத்தினவேலை தமிழகஅரசு இடைநீக்கம் செய்து, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதுதொடர்பான விசாரணைகளும் நடத்தப்பட்டன. மாணவர் சங்கத்தினரும் விளக்கம் அளித்தனர். அப்போது, இந்த உறுதிமொழி விவகாரம் முதல்வருக்கோ, பேராசிரியர்களுக்கோ தெரியாது என மாணவர் பேரவை தலைவர் ஜோதிஷ் குமாரவேல் தெரிவித்தார். மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் மருத்துவக் கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அரசியல் கட்சியினரும், மருத்துவ சங்கத்தினரும் மதுரை மருத்துவக்கல்வி முதல்வர் ரத்தினவேல் இடைநீக்கம் செய்யப்பட்தை வாபஸ் பெற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தினர்.
இந்த விவகாரம் இன்று சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. அதைத்தொடர்ந்து பதிலளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வராக ரத்தினவேலை மீண்டும் நியமிப்பதாக உறுதி அளித்தார்.