சென்னை :
நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில், மும்மொழி பயிற்றுவிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் சமஸ்கிருதத்தை, அதில் சேர்க்கச் சொல்லி, மத்திய அரசிடம் வலியுறுத்தப்போவதாகவும் மத்திய தொழில் மற்றும் வர்த்தகதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று சமஸ்கிருத கலலூரியில் ‘ஆன்லைன்’ வாயிலான, ‘டிஜிட்டல்’ வழி படிப்புகளை அறிமுகம் செய்து வைத்து அவர் பேசினார். அப்போது, டிஜிட்டல் முறையில் கற்பிப்பதற்கு உலகிலேயே சிறந்த மொழி சமஸ்கிருதம் என்றார்.
உலகில் பேசப்படும் பல மொழிகளிலும் சமஸ்கிருத வார்த்தைகள் கலந்திருப்பதை உணரமுடிகிறது என்றும் அவர் தெரிவித்தார். சமஸ்கிருதத்தின் பாரம்பரியத்தை காக்கும் விதமாக சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருதம் உள்பட மும்மொழி பயிற்றுவிப்புத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என மனிதவளமேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜவடேகரிடம் வலியுறுத்தப் போவதாகவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
அதிக மொழிகளை கற்பதால், மாணவர்களின் திறன் உயரும் எனவும் அவர் பேசினார்.