டெல்லி: இங்கிலாந்து, பிரான்ஸ் கூட்டுத்தயாரிப்பான சனோஃபி கொரோன தடுப்பு மருந்து 3வது கட்ட சோதனைக்கு இந்தியஅரசு அனுமதி வழங்கியுள்ளது.
உலகின் மிகப் பெரிய தடுப்பூசி மருந்து தயாரிக்கும் நிறுவனமான இங்கிலாந்தின் ஜிஎஸ்கே நிறுவனமும் ( கிளாஸ்கோ ஸ்மித்கிளைன் நிறுவனம்), பிரான்ஸ் நாட்டின் புரதம் சார்ந்த எதிர்ப்பு மருந்து தயாரிப்பில் பிரபலமான நிறுவனமான சனோபி நிறுவனமும், இணைந்து கொரோனா வைரஸ் (கோவிட்-19) தடுப்பு மருந்துகளை தயாரித்து வருகிறது.
இந்த தடுப்பூசி மறு சீரமைப்பு புரதம் அடிப்படையிலானது ஆகும். இந்த தடுப்பூசியின் 3-வது கட்ட சோதனையை அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்காவில் 18 வயதான 35 ஆயிரம் பேரிடம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த தடுப்பூசியின் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், உலகளவில் அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரக்காவைச் சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட 35 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தியாவிலும் இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக கூறும் சனோஃபி நிறுவனம், இதற்காக தன்னார்வலர்களைச் சேர்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. கொரோனா அடுத்த அலையை எதிர்கொள்ள வரவிருக்கும் காலங்களில் எவ்வளவு மருந்துகள் தேவைப்படும் என்பதை எதிர்நோக்கியிருப்பதாகவும், அதன்படி தடுப்பூசி திட்டத்தை தொடங்கவிருப்பதாகவும் சனோஃபி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்த தடுப்பூசி குறித்து செய்தியாளர்களிடம் கூறிய சனோபி நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைவர் அன்னபூர்ண தாஸ், “சனோஃபி தடுப்பூசியின் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனையை இந்தியாவில் நடத்த அனுமதி கிடைத்துள்ளது. இந்த தடுப்பூசி பரிசோதனையில் கலந்துகொள்ள விரும்புவோரை பதிவு செய்வதற்கான பணி விரைவில் தொடங்கும். கொரோனா வைரசுக்கு எதிரான போரில் எங்கள் தடுப்பூசி முக்கிய பங்களிப்பு செய்யும்” என குறிப்பிட்டார். இந்தியாவில் இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு, செயல்திறன், நோய் எதிர்ப்புத்திறன் ஆராயப்படும். இந்த ஆண்டு 100 கோடி தடுப்பு ஊசிகளை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.