டெல்லி: கொரோனா 3வதுஅலையை எதிர்கொள்ள கூடுதலாக 4 லட்சம் ஆக்ஸிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கத்தின்போது, ஆக்சிஜன் மற்றும் மருந்து பற்றாக்குறையால் ஏராளமானோர் இறந்துபோன அவலம் ஏற்பட்டது. இதையடுத்து, வர இருக்கும் கொரோனா 3வது அலையின்போது, ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை ஏற்படாதவாறு முன்னேற்பாடு செய்வதில் மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில், இந்தியாவில் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி மற்றும் கையிருப்பு தொடர்பாக பிரதமர் மோடி அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன்  முக்கிய ஆலோசனை நடத்தினார். முன்னதாக நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்திலும், கோவிட் பெருந்தொற்றை கையாளவும், கட்டுப்படுத்துவதற்கும் ரூ.23 ஆயிரம் கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் நாடு முழுவதும் 736 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப மற்றும் மாவட்ட சுகாதார நிலையங்களை வலுப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா கூறியுள்ளார்.

இந்த நிலையில், நாடு முழுவதும் ஆக்ஸிஜன் கையிருப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் 3வது அலையை எதிர்கொள்வது குறித்தும்  தொடர்பாக உயர் மட்டக்குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய பிரதமர், நாடு முழுவதும், பிஎம்கேர்ஸ் நிதி மூலம் 1500 ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இது பயன்பாட்டிற்கு வரும் போது கூடுதலாக 4 லட்சம் ஆக்ஸிஜன் படுக்கைகள் பயன்பாட்டிற்கு வரும். ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

ஆக்ஸிஜன் மையங்களை பராமரிக்கவும், செயல்படுத்துவதற்கான பயிற்சியை மருத்துவமனை ஊழியர்களுக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.