டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்தியஅரசு வெளியிட்டு உள்ளது.

தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநராக இருக்கும் சக்தி காந்த தாசின் பதவிக்காலம் வரும் நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைய உள்ள நிலையில்,  அவரது பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில், இன்று திடீரென, தற்போது வருவாய்த் துறை செயலாளராக உள்ள சஞ்சய் மல்ஹோத்ராவை இந்திய  ரிசர்வ் வங்கி கவர்னராக மத்திய பாஜக அரசு  நியமனம் செய்து அறிவித்து உள்ளது.

சஞ்சய் மல்ஹோத்ரா ராஜஸ்தான் கேடர்  1990-ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி. ஐஐடி கான்பூரில் படித்தவர். அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையில் (Public Policy) முதுகலை பட்டம் பெற்றவர். இவர் ராஜஸ்தான் மாநில அரேசில்  பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்துள்ளார். வருவாய் மற்றும் வரி சார்ந்த துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர்.

தொடர்ந்து மத்திய அரசின்நிதி சேவைகள் துறை செயலாளராக இருந்தார். குறிப்பாக, கடந்த 30 ஆண்டுகளாக மின்சாரம், நிதி, வரிவிதிப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுரங்கம் போன்ற துறைகளில் பணியாற்றியுள்ளார். பல்வேறு துறைகளில் கொள்கைகளை வடிவமைத்து, மாநில மற்றும் மத்திய அரசுகளிடம் நற்பெயரை பெற்றவர். தற்போது வருவாய்த்துறை செயலாளராக இருந்து வருகிறார். நேரடி மற்றும் மறைமுக வரிகளுக்கான வரிக் கொள்கை வகுப்பதில் மல்ஹோத்ரா முக்கியப் பங்காற்றினார் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில், அவர் தற்போது இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சஞ்சய் மல்ஹோத்ரா டிசம்பர் 11 முதல் 3 ஆண்டுகளுக்கு பணியில் இருப்பார்.