சென்னை: தூய்மை பணியாளர்கள் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே போராட்டம் நடத்திக் கொள்ளலாம், ஆனால் மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதி மன்றம் கூறி உள்ளது.
இதையடுத்து, மாநகராட்சிஅலுவலகம் முன்பு போராடி வரும் தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளது.

சென்னையின் தூய்மை பணிகளை தனியாருக்கு கொடுப்பதை கண்டித்தும், தூய்மை பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் இன்று 13வது நாளாக கொட்டும் மழையிலும், சென்னை மாநகராட்சி எதிராக பிளாட்பாரத்தில் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை திமுக அரசும், சென்னை மாநகராட்சியும் ஏற்க மறுத்து வருகிறது.
சென்னை மாநகராட்சி, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ராயபுரம் மற்றும் திரு.வி.க நகர் போன்ற பகுதிகளின் தூய்மை பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டன. அதே வேளையில், தண்டையார்பேட்டை, அண்ணா நகர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் பணிகள் நடந்து வருவதாக தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில்தான், தூய்மை பணியை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்று 13ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. அதில், 10 மண்டலங்கள் கடந்த 2020ம் ஆண்டே தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டன. 2021 ஆம் ஆண்டு 7-வது மண்டலம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டபோது அதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து தூய்மை பணியை தனியார் வசம் ஒப்படைக்க நீதிமன்றத்தில் தடை வாங்கியிருந்த பிறகும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் அம்மண்டலங்களை தனியார் வசம் ஒப்படைப்பதிருப்பதே போராட்டத்திற்கான முக்கிய காரணியாக கூறப்படுகிறது.
தூய்மை பணியாளர் மண்டலங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், திமுக தனது தேர்தல் அறிக்கையில், ‘தூய்மை பணியாளர்களில் 10 வருடத்திற்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யபடும்’ எனக்கு கூறி ஐந்தாண்டு ஆட்சியே முடிவடையும் தருவாயில் இன்னும் பணிநிரந்தரம் செயல்படுத்தவில்லை; எனவே தேர்தல் அறிக்கையில் திமுக கூறியதை நிறைவேற்ற வேண்டும் என தூய்மை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களையும் தனியாருக்கு மாற்றும் முயற்சி நடந்து வருகிறது என்றும் தூய்மை பணியாளர்கள் யாரும் நிரந்தர பணியாளர்கள் இல்லை என்றும் கூறுகின்றனர். எனவே, எங்களை மாநகராட்சியின் நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும் எனக் கோரி தூய்மைபணியாளர்கள் 13ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
தூய்மை பணியாளர்கள் 9வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்து காவல்துறை கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், போராட்டத்தை தொடர்வது பொதுஅமைதி மற்றும் பாதுகாப்பிற்கும், பொதுமக்கள் நடமாட்டத்திற்கும் இடையூறு விளைவிப்பதாகவும் இருக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது. எனவே, போராடும் இடத்தில் இருந்து தாங்களாகவே கலைந்து செல்ல வேண்டும் என்றும், உத்தரவை மீறினால் எந்தவொரு நபர் மீதும் வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டு, காவல் ஆணையர் உத்தரவின்படி சென்னை நகருக்கு வெளியில் உள்ள ஒரு இடத்திற்கு காவல் பாதுகாப்பில் கொண்டு செல்லப்படலாம் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.
தூய்மை பணியாளர்கள் போராட்டம் குறித்து பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இதுவரை உடன்பாடு எட்டவில்லை. பொது மக்களின் பொது சுகாதார நலன் கருதி நாங்கள் எங்களுடைய பணி நிரந்தரம் அவுட்சோர்சிங் தொடர்பான பிரதான கோரிக்கையை நீதிமன்றத்தின் முடிவிற்கு விட்டுவிட்டு 31/7/2025 அன்று என்ன பணி நிலையில் பணி செய்தோமோ அதே பணி நிலையில் பணி அளித்தால் உடனே பணிக்கு திரும்ப வர தயாராக இருப்பதாக கடிதம் கொடுத்துள்ளோம்.
அதே வேளையில், தாங்கள் பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை என்றாலும் பொதுமக்களின் நலன் கருதி 5 மற்றும் 6 மண்டலங்களில் உள்ள குப்பைகளை வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் 500 தூய்மை பணியாளர்களுடன் குப்பைகளை அகற்ற உள்ளோம். போராட்டத்தை தொடர்ந்து கொண்டே இந்த பணியை மேற்கொள்ள உள்ளோம் என தெரிவித்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைபணியாளர்களுக்கு அரசியல் கட்சிகள், திரை பிரபலங்கள், கல்லூரி மாணவர்கள் என பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று நிரந்தரம் இல்லையேல் சுதந்திரம் இல்லை என்ற வாதத்தை முன்னிறுத்தி ரிப்பன் மாளிகை முன்பு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். மேலும் இதில் பல்வேறு மாணவர்களும் இணைந்து எங்களோடு போராட போகிறார்கள் என்று போராட்டக் குழு சார்பில் தெரிவித்தனர்.
இதற்கிடையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த உயர்நீதிமன்றம், அரசு மற்றும் காவல்துறையினரின் அறிக்கையை ஏற்று, சென்னை மாநகராட்சி அலுவலகம் முன் போராடும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் அனுமதிக்கப்படாத இடத்தில் யாரும் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. சென்னையில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.