ஐதராபாத்: இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டித் தொடர் ரத்தானது, ஏதோ வேலையை இழந்துவிட்ட உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றுள்ளார் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா.
கொரோனா வைரஸ் பீதி காரணமாக, அமெரிக்காவில் நடக்கவிருந்த இந்தியன் வெல்ஸ் போட்டித் தொடர் ரத்து செய்யப்பட்டது. இந்தியன் வெல்ஸ் என்பது டென்னிஸ் கோர்ட்டுகளுக்கு புகழ்பெற்ற இடமாகும்.
இந்த டென்னிஸ் தொடரில் கலந்துகொள்வதற்காக, சானியா மிர்ஸா, தனது தந்தையும் பயிற்சியாளருமான இம்ரானுடன் அமெரிக்கா சென்றார். துபாயிலிருந்து 16 மணிநேரம் வரை பயணம் செய்து, கலிபோர்னியா சென்றடைந்து, பின்னர் அங்கிருந்து 3 மணிநேரப் பயணத்தில் இந்தியன் வெல்ஸை சென்றடைந்துள்ளனர்.
ஆனால், அங்கு சென்றபின்னர்தான், கொரானோ வைரஸ் அச்சம் காரணமாக, போட்டித்தொடர் ரத்தான விஷயம் சானியா மிர்ஸாவிற்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, “விஷயம் கேள்விப்பட்டவுடன் நாங்கள் சோர்ந்து விட்டோம்.
எங்களையெல்லாம் வேலையைவிட்டு அனுப்பிவிட்டதைப் போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. என்ன நடக்கிறதென்று புரியாமல், அங்குமிங்கும் உலவிக் கொண்டுள்ளோம்” என்றுள்ளார் சானியா மிர்ஸா.
கடந்த 46 ஆண்டுகளாக நடத்தப்பட்டுவரும் இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர், முதன்முறையாக கொரோனா வைரஸ் பீதி காரணமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.