சென்னை: சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் உதயநிதிக்கு காங்கிரஸ் எம்எல்ஏ ஈவி கே எஸ் இளங்கோவன் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைச்சர் உதயநிதி அவர்களின் சனாதனம் ஒழிப்பு பற்றிய பேச்சைக்கண்டு பாஜக பொங்கி குதிக்கிறது. புரண்டு புலம்புகிறது.
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று இளைய சமுதாயத்தின் குரலாக உதயநிதி பேசி இருக்கிறார். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று புத்தர் பேசினார். இராமானுஜர் பேசினார். வள்ளலார் பேசினார். வடஇந்தியாலில் ஜோதிராபுலே பேசினார். டாக்டர் அம்பேத்கர் பேசினார். தமிழ்நாட்டில் தந்தை பெரியார் பேசினார். பெருந்தலைவர் காமராஜர் பேசினார். போரிஞர் அண்ணா பேசினார். கலைஞர் கருணாநிதி பேசினார்.இது காலம் காலமாக நடக்கும் மனிதகுலத்திற்கான போராட்டம்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே அன்னை இந்திராகாந்தி அவர்கள் சனாதனத்தால் கலவரத்தை உருவாக்கி நாட்டை துண்டாடும் நோக்கத்தில் செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தடை செய்தார். சனாதனத்தை ஆதரித்து ஆளுநர் ரவி பேசலாம். பாரதிய ஜனதா கட்சி பேசலாம். ஆனால் சனாதனத்தை எதிர்த்து அமைச்சர் உதயநிதி பேசினால் மட்டும் தவறா? சனாதனம் என்பது வருணாசார தருமத்தை நிலைநாட்டத் துடிக்கும். மக்களை வேறுபடுத்தி ஊருக்கு வெளியெ குடியிருக்கச் சொல்லும். சாதி உயர்வு தாழ்வைக் கற்பிக்கும். குழந்தைத் திருமணத்தை ஆதரிக்கும்.
கணவனை இழந்தால் பெண்களை உடன் கட்டை ஏற வேண்டும் எனக்கூறும். மக்களைத் தாழ்த்தி கோயிலுக்குள் செல்ல விடாமல் தடுக்கும். இப்படிப்பட்ட மனித குலத்தின் சமத்துவத்திற்கு எதிரான சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனப் பேசுவது தவறா? சனாதனத்தை எதிர்த்து பேசியதால் தானே 1949 ஜனவரி 30 அன்று. தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார். சனாதனத்தை எதிர்த்து பெரும் பிரச்சாரம் செய்தார் என்பதால் தானே தந்தை பெரியார் அவர்கள் மீது எண்ணற்ற வழக்குகள் போட்டனர்.
சனாதனத்தை எதிர்த்தார் என்பதற்குத் தானே அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களை 1968 நவம்பர் 7ம் தேதி டில்லி வீட்டில் வைத்து தீயிட்டு எறிக்க முயன்றனர். அன்றைக்குத் தோற்றுப்போனவர்கள் இன்றைக்கு இந்தியக் கூட்டணியின் பலத்தைக் கண்டு தோல்வி பயம் துரத்துகிறது என்பதால் சனாதனத்தை சாக்கு வைத்து மக்களை திசைதிருப்பத் துடிக்கிறார்கள். சனாதனம் சமூகத்திற்கு, சமூக நீதிக்கு எவ்வளவு கேடானது என்பதை சமானிய மக்களை புரிந்து கொள்ள வழிவகுக்கும் வகையில் பேசிய அமைச்சர் உதயநிதி அவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். அவரது சனாதன எதிர்ப்பு பயணத்தில் நாங்கள் உடனிருப்போம்”
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.