சியோல்: உள்நாட்டில் நிலவும் கடுமையான போட்டியை சமாளிக்க முடியாமல், சீனாவில் செயல்பட்டு வந்த சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் கோ. லிட்., அந்நாட்டில் தனது மொபைல் ஃபோன் உற்பத்தியை நிறுத்திக்கொண்டது.
கடந்தாண்டு சீனாவில் செயல்பட்டு வந்த ஒரு மொபைல் ஃபோன் தயாரிப்பு தொழிற்சாலையை மூடியது சாம்சங் நிறுவனம். இந்நிலையில், கடந்த ஜுன் மாதம் ஹூய்சோவில் செயல்பட்டு வந்த தொழிற்சாலையிலும் உற்பத்தியை நிறுத்திபோது, சீனாவில் மொபைல் டெலிஃபோன் தயாரிப்பு முற்றிலும் முடிவடைந்தது.
தென்கொரியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் நிறுவனம் மட்டுமே சீனாவில் தனது உற்பத்தியை நிறுத்திக்கொள்ளவில்லை. சீனாவில் நிலவும் ஊழியர் அதிக பணியாளர் செலவினம் மற்றும் பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட காரணங்களால் வேறுசில நிறுவனங்களும் தங்களின் உற்பத்தியை சீனாவிலிருந்து வேறு நாடுகளுக்கு மாற்றியுள்ளன.
சீனாவின் பீஜிங்கில் தனது ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தி மையத்தை மூடிய சோனி நிறுவனமும், இனிமேல் தாய்லாந்தில் மட்டுமே உற்பத்தி செய்யவுள்ளதாய் அறிவித்துள்ளது. அதேசமயம், ஆப்பிள் நிறுவனம் மட்டும் சீனாவில் தனது பிரதான உற்பத்தி செயல்பாட்டை இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது.