சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் தொழிலாளர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்று சாம்சங் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்கள் போராட்டம் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த நிலையில் இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று மாநில அரசை மத்திய அரசு வலியுறுத்தியது.

இதையடுத்து தமிழக தொழில், முதலீட்டு ஊக்கவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, சிறு குழு தொழில் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் உள்ளிட்டோர் தொழிலாளர் அமைப்பினருடன் தீவிர ஆலோசனை நடத்தினர்.

அதேவேளையில் தொழிலாளர்களின் இந்த போராட்டத்தை ஒடுக்க காவல்துறை மூலமும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

காவல்துறை நடவடிக்கையில் சாம்சங் ஊழியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தொழிலாளர்களின் இந்த போராட்டம் மீண்டும் தீவிரமடைய தொடங்கியது. மேலும் தொழிலாளர்கள் மீதான காவல்துறையின் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிலாளர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்று சாம்சங் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாத ஊதியத்தோடு ரூ.5000 ஊக்கத்தொகை, தொழிலாளர்களுக்கு குளிரூட்டப்பட்ட பேருந்து வசதிகள், கூடுதலான விடுப்புகள், பணிக்காலத்தில் தொழிலாளர் இறந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக ரூ.1 இலட்சம் நிவாரணம், உணவு வசதி, மருத்துவ வசதி போன்றவை மேம்படுத்தப்படும் என சாம்சங் நிறுவனம் உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.