தினகரன் மீது கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துவரும் நாஞ்சில் சம்பத், சசிகலாவுக்கு 40 மார்க் வழங்கியிருக்கிறார்.
டிடிவி தினகரன் தொடங்கிய கட்சியின் பெயரில் திராவிடம் என்பது இல்லை என்று கூறி, தினகரன் அணியிலிருந்து விலகினார் நாஞ்சில் சம்பத். மேலும் அரசியலுக்கே முழுக்கு போட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
ஆனால் அவர் விரைவில் தனது முடிவை மாற்றிக்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. காரணம், ஜெயலலிதா மறைந்தவுடன் சசிகலா தலைமையையேற்க விருப்பம் இல்லை என்று கூறிவிட்டு மறுநாளே அவரது அணியில் சேர்ந்து சசிகலாவை புகழ்ந்தார்.
இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது,, கமல், ரஜினியை நான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளேன். அவர்கள் கட்சியில் இணைய வாய்ப்பே இல்லை. கமல் ஒரு பிஜேபி தயாரிப்பு. நான் நெருப்பு என்னை கரையான்கள் நெருங்க முடியாது. கொள்கைகளுக்காக வாழ்கிற சாதக பறவை நான். பாஜகவுக்கு கால் இருந்தாதானே ஊன முடியும். அது ரத்தத்தை காவு கேட்கிற ஒரு கும்பல்” என்றார்.
மேலும், “இத்தனை நாட்கள் டிடிவி தினகரன் என்ற ஒரு சுமையை சுமந்து கொண்டுதான் இருந்தேன். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துக்காகவே அந்த சுமையை ஏற்றேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “எடப்பாடிக்கு ஒன்றரை மார்க் கொடுக்கலாம். ஓபிஎஸ்ஸுக்கு அரை மார்க் கொடுக்கலாம். டிடிவி தினகரனுக்கு 10 மார்க் கொடுக்கலாம். சசிகலாவுக்கு 40 மார்க் அளிக்கலாம்” என்றார்.