திருச்சி: திருச்சியை அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக, பக்தர்களின் ஓம்சக்தி கோஷத்துடன் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 2004 ஆம் ஆண்டுப்பிறகு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடமுழுக்கு, வேதங்களின் விதிப்படி கடந்த 2016 பிப்ரவரி 6-ந்தேதி மூலவர், உள், வெளி பிரகாரங்கள், மேற்கு, தெற்கு, வடக்கு கோபுரங்களுக்கு மட்டும் கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து (ஜூலை 6ஆம் தேதி) இன்று கல்காரம் எனப்படும் கருங்கற்களால்  கட்டப்பட்ட   கிழக்கு  ராஜகோபுரத்திற்குத் தனியாக கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 108 அடி உயரத்தில் 60 கிலோ எடையுடன் 7 செப்பு கோபுர கலசங்கள், 324 சிற்பங்களுடன் மிக பிரம்மாண்டமான ராஜகோபுரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான கும்பாபிசேக பணிகள் நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன்,  தொடங்கியது.

அதைத்தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை 6.45 மணி முதல் 7.25 மணி வரை சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, பல்வேறு நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர், 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரத்திற்கு ஊற்றப்பட்டு, குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.  அப்போது அங்கு குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான  மாரியம்மனின் பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற பக்தி கோஷம் எழுப்பி பரவசம் அடைந்தனர்.

இந்த கும்பாபிசேகத்தில்,  தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து, சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்தனர். சமயபுரம் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அமைச்சர் கே.என்.நேரு உள்பட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.  பாதுகாப்பு ஏற்பாடுகளில் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.