சென்னை : தமிழ்நாட்டில் முக்கிய தினங்களில் நடத்தப்பட்டு வரும் சமபந்தி போஜனம் இனி  ‘சமத்துவ  விருந்து’ என அழைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

.மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம், நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், வன்கொடுமையை தடுக்க நாம் எத்தனையோ முயற்சிகள் எடுத்தாலும், ஆங்காங்கே சில சம்பவங்கள் தலைதுாக்கவே செய்கின்றன. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு முறையாக நிவாரணம், வளமான எதிர்காலத்திற்கான உத்தரவாதம் ஆகியவற்றை வழங்க, தேவையான விழிப்புணர்வு பயிற்சிகள் விரைவில் துவக்கப்படும்.

அரசு மற்றும் அரசு நிறுவனங்களின் கொள்முதல்களில் 5 சதவீதம், தமிழகத்தை சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் முனைவோரிடம் பெறப்படும்.

சென்னை நந்தனத்தில், எம்.சி.ராஜா பெயரிலான விடுதி வளாகம் உள்ளே, ஆறு தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய மாணவர் விடுதி, 40 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.

‘சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கிய நாட்களில், இதுவரை நடந்து வந்த சமபந்தி போஜனம் என்பது, இனி ‘சமத்துவ விருந்து’ என்று பெயர் மாற்றப்படும்.

இன்றைக்கு இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய ‘திராவிட மாடல்’. ஆதிதிராவிடர், பழங்குடியினரின் வாழ்வியல் பொருளாதார முன்னேற்றத்திற்கு, அரசு எப்போதும் துணை நிற்கும்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.