சேலம்:

3ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் சேலம் உருக்காலையை மத்தியஅரசு தனியாருக்கு தாரை வார்க்கும் வகையில் டெண்டர் கோரியிருந்தது. தற்போது, டெண்டரின் கால அவகாசம் மேலும் 20 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

சேலத்தில் செயல்பட்டு வரும் இரும்பு உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்க மத்தியஅரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. தற்போது உருக்காலையை நடத்தி வரும் மத்தியஅரசு நிறுவனமான செயில் (SAIL). உருக்காலை நஷ்டத்தில் இயங்கி வருவதாக காரணம் கூறி, தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியாக டெண்டர் விடுத்துள்ளது. தற்போது அந்த டெண்டருக்கான கால அவகாசம் மேலும் 20 நாள் நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட சேலம் உருக்காலை தற்போது தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வருகிற ஆகஸ்டு 1-ந் தேதிக்குள் டெண்டர் எடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களிடையேஅச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழகத்தை சேர்ந்த அதிமுக, திமுக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின் றன. தமிழக சட்டமன்றம், பாராளுமன்றத்திலும் இதுகுறித்து தமிழக எம்பிக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும், அதிமுக, திமுக எம்.பி.க்கள் இணைந்து பிரதமரை சந்திக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதற்கிடையில், சேலம், உருக்காலையில் வேலைப்பார்க்கும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கடந்த மாதம், உருக்காலையின் மூன்று வாயில்களிலும் பேரணியாக சென்று மத்திய அரசின் தனியார் மயம் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் டெண்டருக்கான தேதி 20ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.