சேலம் இரும்பாலயை தனியார் மயமாக்குவதை கண்டித்து, ஆலை தொழிலாளர்கள் தரப்பில் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்தபட்டு வருகிறது.

சேலம் இரும்பாலை, கடந்த 1981ல் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் முதல்வராக இருந்த கலைஞர், மத்திய அரசிடம் போராடி பெற்ற ஆலை இது. இந்த ஆலைக்காக 3 ஆயிரம் விவசாயிகள், தங்களின் நிலத்தை வழங்கினர். சேலத்தில் உள்ள கஞ்சமலையில் இருந்து இரும்பு தாதுக்களை எடுத்து பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இரும்பாலையில், உருட்டாலை மட்டும் முதலில் செயல்பாட்டுக்கு வந்தது. பிறகு விரிவாக்கத்தின் போது, இரும்பாலையாக மாற்றம் பெற்றது.

இதன்மூலம் தற்போது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், கார்பன் சீட் ஸ்டீல் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகிறது. சேலம் இரும்பாலையில் 2 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாக வேலை செய்து வருகின்றனர். இதுபோக 3 ஆயிரம் பேர், மறைமுக வேலைவாய்ப்பை பெறுகின்றனர். இவ்வளவு சிறப்பு வாய்ந்த சேலம் இரும்பாலை கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. மத்திய அரசின் சரியான உந்துதல் இல்லாததால், இந்நிலை ஏற்பட்டுள்ளது என தொழிலாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக சேலம் இரும்பாலை உள்பட சில ஆலைகளை தனியாருக்கு கொடுத்திட மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கு ஒவ்வொரு ஆலையிலும் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று செயில் நிறுவனம், தனது கட்டுப்பாட்டில் உள்ள சேலம் இரும்பாலையை தனியாருக்கு விற்க உலகளாவிய டெண்டர் கோரி அறிவிப்பை வெளியிட்டது. சேலம் இரும்பாலை தனியார் மயத்தை கண்டித்து தொழிலாளர்கள் அனைவரும் இன்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.