சென்னை: குவைத் நாட்டில் ஆசிரியப் பணி வாய்ப்பு என்று ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட 32 வயது தமிழகப் பெண், அங்கு வீட்டு வேலைசெய்ய கட்டாயப்படுத்தப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு தற்போது ஒருவழியாக மீட்கப்பட்டு தமிழகம் திரும்பியுள்ளார்.

அவரின் பெயர் சுமதி. எம்.ஏ. பட்டப்படிப்பை நிறைவு செய்தவர். ஆசிரியப் பணி என்று கூறப்பட்டு குவைத் சென்றடைந்த அவருக்கு, அப்போதுதான் உண்மை தெரியவந்தது. அவர் வீட்டு வேலை செய்ய பணிக்கப்பட்டார். ஆனால், அதை மறுத்து, தன்னை திரும்பவும் தமிழகத்திற்கு அனுப்பிவைக்க வற்புறுத்திய நிலையில், அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார்.

பின்னர், பால்கனியின் மூலம் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்துவிட்டார். இந்த விபத்தில் அவரின் கால்களில் பலத்த அடிபட்டதோடு, தண்டுவடத்திலும் காயம் ஏற்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இந்தியன் ஃப்ரண்ட்லைனர்ஸ் என்ற அமைப்பின் உதவியுடன் இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு தாயகம் திரும்பியுள்ளார். “எனது வயதான நோயாளி தாயாரை காப்பாற்றுவதற்காக பணம் சம்பாதிக்க சென்று இந்த நிலைக்கு ஆளாகிவிட்டேன். இனிமேல், நான் முதலிலிருந்து அனைத்தையும் தொடங்க வேண்டும்” எனக்கூறி கண்ணீர் சிந்தினார்.