சேலம்:
சேலத்தில் பிரபலமான கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்து உள்ளது. 21 நாட்கள் நடைபெறும் பிரசித்தி பெற்ற ஆடித்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ள மாவட்ட மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், சேலம் உள்பட பல மாவட் டங்களிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
தற்போது ஆடி மாதம் பிறந்துள்ளதால், தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடித்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில்,  சேலம் பழைய பஸ் நிலையம் அருகே   பிரசித்திபெற்ற கோட்டை மாரியம்மன் திருக்கோவில் உள்ளது.  இந்த கோவிலில் நடைபெறும் ஆடித்திருவிழா புகழ்பெற்றது. 22 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறம் இந்த திருவிழாவுக்கு  மாவட்டம் முழுவதும் மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களிலும் இருந்தும் ஏராளமானோர் கலந்துகொண்டு அம்மன் அருள் பெற்று செல்வர்.

இந்த ஆண்டும்  ஆடிப்பண்டிகையை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கடந்த இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.  வருகிற 23-ந் தேதி கோவிலில் பூச்சாட்டுதல் விழா நடக்கிறது. அதைத்தொடர்ந்து மாநகரில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் பூச்சாட்டுதலுடன் ஆடிப்பண்டிகை தொடங்கும். தொடர்ந்து  அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி சக்தி அழைப்பு நிகழ்ச்சியும், 7-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை 3 நாட்கள் பொங்கல் வைத்து வழிபாடு, மாவிளக்கு ஊர்வலம், 13-ந் தேதி பால்குட ஊர்வலம், மகா அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த விழாக்களின்போது ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள்.
இதன் காரணமாக கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக கருதி,  கோட்டை மாரியம்மன் கோவில் வழக்கமாக நடைபெறும் ஆடித்திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து இந்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால்  ஆடிப்பெருந்திருவிழா ரத்து செய்யப்படுவதாகவும், பொதுமக்கள், உபயதாரர்கள்  திருக்கோவில்நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு  நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறது என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
கோட்டை மாரியம்மன் கோவில் ஆடிப்பெருந் திருவிழா ரத்து செய்யப்பட்ட நிகழ்வு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.