janthaa
கண்கள் பார்ப்பதை நம்பி விடுகிறோம். நம் கண் முன்னால் என்ன நடக்கிறது என்பதையோ, வாட்சப் அல்லது செய்திகளில் காட்டப்படும் வீடியோவில் வருவதை அப்படியே உண்மையானதாக நம்பி விடுவது நம் வாடிக்கை. இது  சரியானச் செயலா?
இத்தகைய காணொளிகளை ஊடகங்கள் தங்களின் தர்மத்தினை மீறி உண்மைத்தன்மையை ஆராயாமல் வெளியிட்டு தங்களுடைய டீ.ஆர்.பி-யை வளர்த்துக்கொள்கின்றன. அதனடிப்படையிலேயே சமூகவலைத்தளங்களில் பொதுமக்களும்  பொங்கி எழுந்து ஒருவரின் வாழ்க்கையினையே சிதைத்து விடுகின்றோம்.
சமூக ஊடகச் சீற்றம் :
சமூக ஊடக சீற்றம் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதமாக உருவெடுத்து வருகின்றது. நல்லவிடயங்களாக, அரசின் இ.பி.எஃப். மீதான வட்டிவிகிதம் சமூக ஊடகச் சீற்றம் காரணமாக மத்திய அரசால் திரும்பப் பெறப்பட்டது.  நேற்றுக் கூட,  புதுக்கோட்டை அருகே ஒரு சாதிவெறிப் பெற்றோரிடமிருந்து அடித்துத் துன்புறுத்தப்பட்ட ஒரு பெண்ணினைக் காக்க உதவியுள்ளது.
ஆனால் பல விசயங்களில் அப்பாவிகளை காவு வாங்கவும் அது தவறவில்லை. அவ்வாறு தான்  ஜேஎன்யூ பிரச்சனையில்  சில வீடியோ/ஆடியோவினைத் திரித்து, உண்மையில் கன்னையாகுமார் சொல்லாத முழக்கங்களைத் சொல்லியதாக மோசடியாக சித்தரிக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டு,  அவரை தேசத்துரோக வழக்கில் சிறையிலடைத்து சந்தோசப்பட்டோம். உத்தராகண்ட் பா. ஜ.க., எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி, வழக்கில் சக்திமன் எனும் குதிரையின் கால் உடைக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்றும் உலாவந்தது.
சில சமயங்களில் ஒரு வீடியோ எடிட்டிங்/திரிக்கப்படவேண்டுமென அல்லது தேவையில்லை. விசமத்தனத்துடன் இணைக்கப்படும் ஒரு தலைப்பே ஒருவரின் வாழ்க்கையைச் சீர்குலைக்கப் போதுமானதாகவுள்ளது.
உதாணத்திற்கு, ஆகஸ்ட் 2015 இல், “தில்லி மெட்ரோ குடித்துவிட்டு தள்ளாடும் தில்லி போலீஸ் மனிதன் – வேடிக்கை” என்ற தலைப்பில் காணொளியை  ஆம் ஆத்மியைச் சேர்ந்த இளைஞர் அணி முகனூல் பக்கம் மற்றும்  “ஜன்தாக்கா ரிபோர்டர் எனும் பத்திரிக்கை” வெளியிட அது ஆயிரம், லட்சம் என  தீயாய்ப் பரவியது. பல செய்தி நிறுவனங்களும், டைம்ஸ் நௌ உள்ளிட்ட சேனல்களும் திரும்பத்திரும்ப ஒளிபரப்பி மக்களின் கவனத்தையும் ஈர்த்த்து. மக்களின் வற்புறுத்தல், போலிசாரின் அவசர நடவடிக்கைக்கும் நிர்பந்திக்கப்பட்ட்து. எந்த விசாரணையும் இன்றி சலீம் என்கிற காவலர் இடைநீக்கம் செய்யப் பட்டார்.
சலீமுக்கு நடந்தது என்ன?
சலீம் தான் குடிபோதையில் இல்லை என்றும், தான் ஒரு வருடமாக பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதன் பின் விளைவுகளான நினைவிழப்பு, உடல் மற்றும் பேச்சு சிரமங்களுக்காகத்  தான் மருத்துவச் சிகிச்சை எடுத்து வந்ததாகவும், குறிப்பிட்ட வேலைநாளில் நீண்ட நேரம் வேலை செய்துமுடித்ததன் விழைவாகவும் அதற்கு முதல்நாள் அவர் மருந்து உட்கொள்ளவில்லை என்பதாலும் தாம் நிலைக்குலைந்து விழுந்ததை, ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கியதால் தன்னை விசாரிக்காமலேயே இடைநீக்கம் செய்யப் பட்டது தவறு என நிருபித்து இரண்டு மாதங்களுக்கு பிறகு பணியில் சேந்துவிட்டார். அவர் இடைநீக்கம் செய்யப்பட்டக் காலத்தை பணிக்காலமாக மாற்றப் பட்டு ஊதியத்தையும் பெற்றுவிட்டார்.
இருந்த போதிலும், அவர் தனிப்பட்ட முறையில் ஸ்னதித்த இன்னல்களும், அவமானங்களும், இழப்புகளும் ஏராளம்.
ஆம். வைரல் வீடியோவின் விளைவாக சலீமின் வாழ்க்கை நிறைய சேதம் அடைந்துவிட்டது.  அதன் விழைவாக, அவரது மனைவி மாரடைப்பால் பாதிக்கப் பட்டது, அவரது  தில்லியில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் கேரளாவில் உள்ள தனது வீட்டில் இருந்து பல விசாரணை அழைப்புகள், காவல் துறையில் எதிர்கொண்ட விசாரணை பெரும்தலைவலியை சலீமுக்கு கொடுத்தது.
ஊடகங்கள் தர்மத்தை பின்பற்றியனவா ?
எல்லவற்றினும் முதன்மையான கேள்வியாக, “செய்தி ஊடகங்கள் ஒரு செய்தி வெலியிடுகையில் பின்பற்றவேண்டிய முறையைச் சரியாக பின்பற்றியனவா என்ற பிரச்சினையையும் ஒரு தவிர்க்க முடியாத கேள்வியாகும்.
செய்தி ஊடகங்களும் பல செய்தி நிறுவனங்களும்  இந்தக் கட்டத்தில் இதழியல் கொள்கையான  அடிப்படைச் சமநிலையை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
குறிப்பாக அடையாள மற்றும் இடைநீக்கம் செய்தியில்,சலீமின் அடையாளம் கண்டு, அவரைத் தொடர்பு கொண்டு அவரின் விளக்கம், அவரது பக்க தகவலும் சேகரிக்கப் பட்டு செய்தி வெளியிடப்பட்டு இருக்க வேண்டும். . இது செய்யப்பட்டிருந்தால் சலீம் நோய் பற்றிய உண்மை ஆரம்பத்திலேயே செய்தியாக வெளிப்பட்டிருக்கும்.
நீதிப் போராட்டம்:
நியாயம் கேட்டும், குறிப்பிட்ட காணொளியை நீக்கக் கோரியும்,தனக்கு ஏற்பட்டது போன்ற துயரம் எதிர்காலத்தில் யாருக்கும் ஏர்படாதவாறு இருக்க தேவையான விதிமுறைகளை வகுக்க வேண்டுமெனக் கோரியும் சலீம் தற்பொழுது உச்சநீதிமன்றத்தினை நாடியுள்ளார்.
சலிம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டபொழுது முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனங்கள், அவர் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டதை மக்களின் பார்வைக்கு கொண்டுசெல்லாததால், தம் கட்சிக்காரர் பொதுமக்களின் பார்வைக்கு குடிகார மற்றும் இடைநீக்கம் செய்யப்பட்ட காவலராகவும் தெரிவதாகவும் சலீமின் வழக்கறிஞர்  வில்ஸ் மேத்யூ வாதாடினார்
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் என்னத் தீர்ப்பு வழங்கப்போகின்றது என்பதை நம்மால் தற்பொழுது கூறிவிட முடியாவிட்டாலும், ஒன்றைத் தீர்க்கமாக் கூறமுடியும். “கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மேல்” என்பதை நினைவில் நிறுத்தி, சமூகவலைத்தளங்களில் அரச்சீற்றம் கொள்வதற்கு முன் ஒரு சம்பவத்தின் உண்மைத்தன்மையை உறுதிசெய்வோம்.
இதனை பத்திரிக்கை நண்பர்களும், பொது மக்களும் பின்பற்றவேண்டியது அவசியம்.