ண்டிகர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு பெற தங்கள் வாழ்வையே பணயமாக வைத்து சேவையாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு ஹரியானா அரசு இருமடங்கு ஊதியம் வழங்க உள்ளது.

உலகளவில் 97300 க்கும் அதிகமான மக்களை  பலி கொண்ட COVID-19 லிருந்து இதுவரை 3.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். இதற்கு முதன்மை காரணமாகத் திகழ்பவர்கள் மருத்துவ பணியாளர்கள்.

எனவே அவர்களின்  ஊதியத்தை  இரு மடங்காக உயர்த்துவதாக ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். காணொலிக் காட்சி வழியே மருத்துவர்களுடன் கலந்துரையாடிய அவர் இவ்வாறு அறிவித்தார்.

மேலும் “மருத்துவர்கள் கடவுளர்களுக்கு இணையானவர்.  அவர்களின் சேவை இந்த நெருக்கடியான சூழலில் முதன்மை பெறுகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள புதிய காப்பீட்டு திட்டத்தில்  வராதோர் மாநில அரசின் 50 லட்சம் மற்றும் 10 லட்சம் காப்பீடு பெறுவர்.

மருத்துவப் பணியாளர்களின் குடும்பத்தினர்க்கு தீவிர கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டால்  குடும்பத்திற்கும் இந்த காப்பீட்டு தொகை வழங்கப்படும்.

மருத்துவர்கள், செவிலியர்கள்,  ஃபார்மசிஸ்ட்,   பரிசோதனைக்கூட ஆய்வாளர்கள், அவசர ஊர்தி பணியாளர்கள், 4 ஆம் நிலை ஊழியர்கள் ஆகியோர் இந்த ஊதிய உயர்வைப் பெறுவர்” என்றார்.

பாதுகாப்புக் கருவிகளின் இருப்பு பற்றி முதல்வர் கூறுகையில்,   கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு   மூன்றடுக்கு மாஸ்க்குகள், N95, வெண்டிலேட்டர் போன்றவை தற்போது குறைவின்றி வழங்கப்பட்டுள்ளன எனக் கூறினார்.

கொரோனா சிகிச்சை எனும் பெரும் போராட்டத்தில் மருத்துவர்கள்  தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்துப் போராடும் வீரர்கள் எனவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஹரியானாவில் இதுவரை 170 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள  நிலையில் மூவர் உயிரிழந்துள்ளனர்.