ரியோ டி ஜெனிரோ:
பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேஹ்வால் வெற்றி பெற்றிருக்கிறார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடந்துகொண்டிருக்கிறது. இதுவரை இந்திய வீரர்களுக்கு ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த துப்பாக்கிச் சுடுதல், வில்வித்தை உட்பட பல போட்டிகளிலும் ஏமாற்றமே மிஞ்சியது.
2
இந்த நிலையில் இன்று தொடங்கிய ஒலிம்பிக் பேட்மிண்டன் தனிநபர் போட்டியில் சாய்னா, பிரேசிலின் லொஹானி விசெண்டேவுடன் மோதினார்.
போட்டியின் துவக்கம் முதலே இரு வீராங்கனைகளும் வெற்றிக்காக கடுமையாக போராடினர். விறுவிறுப்பாக நடந்த முதல் செட்டில் சாய்னா 21-17 என வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய சாய்னா அந்த செட்டையும் 21-17 என எளிதாக வென்றார்.
முடிவில், பிரேசிலின் லொஹானி விசெண்டேவை 21-17, 21-17 என்ற செட்களில் வீழ்த்தினார். இதன் மூலம், சாய்னா, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.