புதுடெல்லி:

தவறே செய்யாமல் இந்தியாவைச் சேர்ந்த 5 கப்பல் மாலுமிகள் கிரீஸ் சிறையில் 13 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளனர்.


பஞ்சாபை சேர்ந்த புபீந்தர்சிங், பெங்களூருவைச் சேர்ந்த குமார் கங்காதீப், பஞ்சாபை சேர்ந்த ஜெய்தீப் தாக்கூர், பெல்காமைச் சேர்ந்த சதீஷ் பாட்டில் மற்றும் மதுராவைச் சேர்ந்த ரோத்தாஸ் குமார் ஆகியோர் தான்சானியா எம்வி.ஆன்ட்ரோமேடா என்ற வர்த்தக கப்பலில் மாலுமிகளாக பணியாற்றி வந்தனர்.

வெடிமருந்து வைத்திருந்ததாக கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் கிரீஸில் கைது செய்யப்பட்டனர்.
13 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட அவர்களுக்கு கிரேக்க நாட்டு கப்பல் நிறுவனம் சம்பளமோ அல்லது சட்டப்பூர்வ உதவியோ செய்யவில்லை.

ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு கொடுத்தனர். மற்ற கிரிமினல்களோடு அடைத்துவைத்தனர். இவர்களுக்கு பாகிஸ்தான் நண்பர்கள் உதவியதால் விடுதலையாகி வெளியே வந்தனர்.

இது குறித்து புபீந்தர்சிங்கின் தந்தை பால்கர் கூறும்போது,”நான் எல்லை பாதுகாப்புப் படையில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன்.

தற்கொலை செய்துகொள்ளப் போவதாக சிறையிலிருந்து என் மகன் மெஸேஜ் அனுப்பினான். அவனது சகோதரிகள் திருமணங்களுக்கு அவன் பங்கேற்க முடியவில்லை. ரூ.10 லட்சம் கடன் வாங்கி அவன் கப்பல் படிப்பு படிக்க வைத்தேன்” என்றார்.