சென்னை:

.தி.மு.க.வைச் சேர்ந்த சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தனது பேஸ்புக் பக்கத்தில் விடுதலைப்புலி பிரபாகரன் புகழ் பாடும் பாடலை பகிர்ந்துள்ளார். இதையடுத்து அவர் கட்சி மாற்பபோகிறாரோ என்கிற யூகம் மீண்டும் கிளம்பியிருக்கிறது.

சைதை துரைசாமி

ஜெயலலிதாவின் வழக்கத்துக்கு ஏற்ப, சைதை துரைசாமியும் திடீரென உச்சத்துக்கு – அதாவது, சென்னை மேயராக – கொண்டுவரப்பட்டார். பிறகு, வழக்கம்போல மேலிட உத்தரவு ஏதோ வரவே, செய்தியாளர்களிடம் பேசுவதையும், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையும் தவிர்த்து வந்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, சசிகலாதான் பொதுச்செயலாளர் பதவியை ஏற்க வேண்டும் என்று  நேரில் கோரிக்கை வைத்தவர்களில் இவரும் ஒருவர். ஆனால் அதன் பிறகு ஏனோ அமைதியாகிவிட்டார்.

அப்போது, “ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் ஆதரவாளராக சைதை துரைசாமி மாறிவிட்டார்.  அதிமுகவை உடைக்க திட்டமிடுகிறார்” என்று யூகச் செய்திகள் பரவின.

அப்போது (கடந்த ஜனவரி மாதம்) சைதை துரைசாமி, “மாடிப்படியில் தவறி விழுந்துவிட்டேன். கால் ஜவ்வு கிழிந்துவிட்டது. ஆகவே மருத்துவர் ஆலோசனையின்படி முழு நேரம் ஓய்வெடுத்து வருகிறேன். இந்த நிலையில் என்னைப்பற்றி வதந்தி பரப்பிவிட்டார்கள். அதில் உண்மையில்லை. சசிகலாவுக்கே எனது ஆதரவு” என்று தெரிவித்தார்.

அதன் பிறகு இதுவரை கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் சைதை துரைசாமி கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில் நேற்று, தனது முகநூல் பக்கத்தில், விடுதலைப் புலிகள் பிரபாகரன் புகழ்பாடும் பாடல் ஒன்றை பதிவேற்றியுள்ளார். “சிங்க நடை.. சிதறும் படை” என்ற அந்த உணர்ச்சிகரமான பாடல், பிரபாகரனை கொண்டாடுவதாக உள்ளது.

இதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, ஈழ விடுதலையை ஆதரித்து பேசியிருக்கிறார். இது குறித்து சட்டமன்றத்தில் தீர்மானமும் இயற்றியிருக்கிறார். ஆனால் விடுதலைப்புலிகளை அவர் ஆதரித்ததில்லை.  “ராஜீவ் கொலைக்கு முன்பு நான் விடுதலைப்புலிகளை  ஆதரித்திருக்கிறேன். அதன் பிறகு நான் ஆதரித்ததில்லை” என்று விளக்கமும் சொல்லியிருக்கிறார்.

விடுதலைப்புலிகளை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

அ.தி.மு.க.வின் தற்போதைய பொதுச்செயலாளர் சசிகலாவோ, துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனோ விடுதலைப்புலிகள் குறித்தோ, இதர பொது விவகாரங்கள் குறித்தோ என்னவிதமான கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

முகநூல் பக்கம்…

இந்த நிலையில் சைதை துரைசாமி, திடீரென தனது முகநூல் பக்கத்தில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் புகழ் பாடும் வீடியோ பாடலை பதிவேற்றியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தன் அரசியல் பயணத்தில் ஏதோ மாற்றத்தை விரும்புகிறாரோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து சைதை துரைசாமியை தொடர்புகொண்டு கேட்டோம். அவர், “அப்படி ஏதும் பாடலை நான் பகிரவில்லையே” என்றவர், “கூட்டங்களில் பேசச் செல்லும்போதோ, வேறு முக்கிய தருணங்களிலோ எனது செல்போனை யாரிடமாவது கொடுத்துச் செல்வேன். அவர்கள் தங்களுக்கு விருப்பமான தகவல்களை பகிர்ந்துவிடுகிறார்கள்” என்றார்.

மேலும்,”நான் எப்போதுமே அ.தி.மு.க. தொண்டன். அதே நேரம் கட்சி மாட்சரியங்களுக்கு அப்பாற்பட்டு பொது நோக்கோடு செயல்படுபவன். தனிப்பட்ட முத்திரைகளை குத்திக்கொள்வதில்லை” என்றார்.

அந்த பாடல்..:

https://youtu.be/cmmG2Mnnl18