சென்னை:

சைதை துரைசாமி நேர்மையாளர் என்று தி.மு.க.வைச் சேர்ந்த மா.சுப்பிரமணியனுக்கு அதே கட்சியைச் சேர்ந்த சைதை மார்டின் பதில் அளித்துள்ளார்.

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி வீ்ட்டில் வருமானவரித்துறை சோதனை நடந்ததாக மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

ஸ்டாலின் – சைதை துரைசாமி

இதற்கு பதில் அளித்த  சைதை துரை சாமி, “நான் அறவாழ்க்கை வாழ்கிறேன். எனது வருமானத்தில் பெரும்பகுதியை பொது மக்களுக்கு செலவிட்டு வரு கிறேன். அதோடு முறையாக வருமான வரி செலுத்தி வருகிறேன். எனது வீட்டில் வருமானவரி சோதனை நடந்ததே இல்லை. ஆகவே தவறான.. பொய்யான பரப்புரைகளை செய்ய வேண்டாம் என்று மூன்று முறை அவருக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அவர் தொடர்ந்து பொய்கூறி வருகிறார்.

நான் மேயராக 5 ஆண்டு காலம் இருந்த போது மு.க.ஸ்டாலின் காலத்தில் நடைபெற்ற ஊழல்கள், குறைகளை ஆதாரப்பூர்வமாக மன்றத்தில் எடுத்து ரைத்தேன். கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டா லினை எதிர்த்து நான் போட்டியிட்டு தோல்வி அடைந்தேன். அவரது வெற்றி செல்லாது என்று நான் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த காரணங்களால் தான் மு.க.ஸ்டாலின் என்மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு நடக்காத ஒன்றை நடந்ததாக சொல்லுகிறார்.

மு.க.ஸ்டாலினிடம் நான் 3 கேள்விகளை முன் வைக்கிறேன். சேகர் ரெட்டிக்கும் இவர்கள் குடும்பத்தினருக்கும் பணத்தொடர்பு உண்டா? இல்லையா?

2ஜி ஊழல் புகாரில் சிக்கிய ஸ்வான் நிறுவன அதிபர் ஷாகித் பால்வாவை மு.க.ஸ்டாலின் 2 முறை சந்தித்து கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி கொடுக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தினாரா இல்லையா? பால்வாவுடன்  இவர் பேச்சுவார்த்தை நடத்தியதை சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் கொடுத்த சாதிக் பாட்ஷா மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த சொல்வாரா?

ரூ.22 கோடி மதிப்புள்ள ஹம்மர் சொகுசு கார்கள் இறக்குமதியில் உங்கள் மகன் உதயநிதி மற்றும் மு.க.அழகிரி கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக ஸ்டாலின் வீட்டிலும் மு.க.அழகிரி பண்ணை வீட்டிலும் சி.பி.ஐ. சோதனை நடத்தியதா? இல்லையா? அந்த ஹம்மர் கார் உதயநிதியிடம் எப்படி வந்து சேர்ந்தது? இந்த 3 கேள்விகளுக்கும் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதில் சொல்ல வேண்டும்” என்று சைதை துரைசாமி கேள்வி எழுப்பி இருந்தார்.

திமுக மா.சுப்பிரமணியன்

இதற்கு மு.க.ஸ்டாலின் சார்பாக, சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம் பதில் அளித்தார். அப்போது, “மு.க. ஸ்டாலின் குற்றம் குறைகளுக்கு அப்பாற்பட்டவர். அவரைப்பபற்றி அவதூறு பேசும் சைதை துரைசாமி, சென்னை மேயராக பொறுப்பு வகித்தபோதுதான்  முறைகேடுகள் நடந்தன.  மேலும், சைதை துரைசாமியின் முறைகேடுகள் குறித்து தி.மு.க.வைச் சேர்ந்த சைதை மார்டினிடம் கேட்டால் விரிவாகச் சொல்வார்” என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  சைதை மார்டின், “நான் தி.மு.க.வைச் சேர்ந்தவன்தான். ஆனால், மா.சுப்பிரமணி யன் கூறுவது போல சைதை துரைசாமி முறைகேடுகள் செய்வபவர் இல்லை. அவர் நேர்மை யாளர்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது:

“சைதை துரைசாமி சத்தியமும் நேர்மையுமாய் இருக்கிறார்..! நான் இன்றும், என்றும் திமுக-காரன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுபவன். சைதை துரைசாமியின் தனிமனித ஒழுக்கம் பற்றி

சைதை மார்ட்டினிடம் கேட்டறிந்துகொள்ளலாம் என்று எங்கள் கட்சியைச் சேர்ந்த மா.சுப்பிரமணி யன் எம்.எல்.ஏ., அறிக்கை விடுத்திருப்பதால், சில விஷயங்களை பேச விரும்புகிறேன்.

1965 ஆண்டுகளில், சைதை துரைசாமியின் அண்ணன் சுப்பராயன் அரிசிப்பொரி உற்பத்தி மற்றும் மொத்த விற்பனையாளராக நல்ல சம்பாத்தியத்துடன் சென்னையில் தொழில்செய்து வந்தார். அவர் ஆதரவில் சைதை துரைசாமி இருந்த காலம் முதலே எனக்கு அவரைத் தெரியும். நான் சைதை தொகுதி அதிமுக பொருளாளராகவும், துரைசாமி தொகுதி துணை செயலாளராகவும் இருந்தார். அன்றைய எங்கள் அரசியல் தொடக்க காலத்திலே, என் ஸ்கூட்டரின் பின்னே சைதை துரைசாமியை அமர வைத்து, பல்வேறு இடங்களுக்கும் அழைத்துச்சென்று பணி ஆற்றியிருக்கி றேன்.

அதன்பிறகு காலம்சென்ற கிட்டுவின் அன்பு காரணமாக நான் திமுகவிற்கு சென்றேன். கட்சியி னால்  பிரிந்து நின்றாலும், அன்று முதல் இன்று வரை சைதை துரைசாமியை நெருக்கமாக அறிந்த வன். அதனால் சைதை துரைசாமி மீது வேண்டுமென்றே சிலர் அவதூறு கிளப்பும் சூழலில், ஒரு நல்ல கிறிஸ்துவனாக எனக்குத் தெரிந்த சில உண்மைகளை சொல்லவேண்டியது அவசியம் என்பதை உண்ர்கிறேன்.

சைதை துரைசாமி தொகுதி அமைப்பாளராக, சட்டமன்ற உறுப்பினராக, மாநகர மேயராக இருந்தி ருக்கிறார் என்றாலும், பதவியின் மூலம் பணம் பார்ப்பதை அருவெறுப்பாக நினைப்பவர். அந்தக் காலத்தில் பாஸ்போர்ட்டுக்கு கையெழுத்து வாங்கிக்கொடுப்பதற்கு பலரும் அரசியல்வாதிகளைத் தான் அணுகுவார்கள். அதற்காக கேட்ட பணம் கொடுப்பார்கள்.

திமுக மார்ட்டின்

ஆனால், எந்தக் காரணத்துக்காகவும் உதவி கேட்டு வருபவர்களிடம் பணம் வாங்கக்கூடாது என்று சொல்வது மட்டுமின்றி, அவர்க ளுக்கு தன்னுடைய செலவில் டீ, காபி வாங்கிக்கொடுத்து அனுப்புவார் சைதை துரைசாமி. உதவி என்று யாராவது வந்துவிட்டால் தாசில்தார் அலுவலகம் தொடங்கி காவல் நிலையம் வரையிலும் ஒரு கம்ப்யூனிஸ்ட் கட்சிக்காரன் போலவே நேரடியாகச் சென்று காரியத்தை முடித்துக்கொடுப்பார்.

ஊழலை ஒழிக்கவேண்டும் என்று கணக்கு கேட்டு எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியில் இருக்கிறோம். அதனால் எந்தக் காரணம் கொண்டும் ஊழல் செய்யக்கூடாது என்று சொல்லிலும், செயலிலும் உறுதியாக இருப்பார்.

அவர் மட்டுமின்றி அவரை சார்ந்தவர்களையும் ஊழல் செய்யக்கூடாது, நேர்மையாக உழைக்க வேண்டும் என்று அறிவுரைகளை வீசிக்கொண்டே இருப்பார். அதனால் அவரை நாங்கள் சாமியார், அரசியல் சித்தர் என்றுதான் அழைப்போம்.

தன் கட்சியினர் சம்பாதிப்பதற்காக எம்.ஜி.ஆர். மதுபானக் கடைக்கு அனுமதி கொடுத்தபோதும், தனக்கு வேண்டாம் என்று உறுதியாக நின்றார். நாங்கள் வற்புறுத்தியன்பேரில் எங்களுக்கு மதுக்கடை வாங்கிக்கொடுத்தார். ஆனால், அந்த மதுக்கடை சம்பாத்தியத்தில் இருந்து ஒரு பைசாகூட அவருக்குச் செலவழிக்க சம்மதிக்க மாட்டார்.

பதவியில் இல்லாத 20 ஆண்டுகளில் அவர் ரியல் எஸ்டேட் தொழிலில் கடுமையாக உழைத்து முன்னுக்கு வந்திருக்கிறார். அதற்கு முன்பு ஆட்டோ பர்மிட் வாங்கி நாள் ஒன்றுக்கு 30 ரூபாய் வருமானம் பார்த்ததும், ஈரோடு, சேஷசாயி பேப்பர் மில்லில் டிரான்ஸ்போர்ட் கான்டிராக்ட் எடுத்து, அந்த வருமானத்தில் கட்சிப்பணியும் பொதுப்பணியும் நடத்தியதும் எனக்குத் தெரியும்.

இதுதவிர வேறு எந்த விதத்திலும் அவருக்கு வருமானம் கிடையாது.

அரசியலைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர். மட்டும்தான் அவரது தலைவர், தெய்வம். கே.ஏ.கிருஷ்ண சாமி, ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்களை எம்.ஜி.ஆரின் தளபதியாக ஏற்றுக்கொண்டவர். ஆர்.எம். வீரப்பன் அமைச்சராக இருந்தபோது, சைதை தொகுதி முழுவதும் அவரை அழைத்து வந்து மக்கள் குறை தீர்ப்பதற்கு அதிக அக்கறை எடுத்துக்கொண்டார். கட்சி பேதமின்றி, சாதி பேதமின்றி, மத பேதமின்றி பொதுமக்களுக்கு உழைப்பதில் சைதை துரைசாமிக்கு நிகரான அரசியல்வாதியாக யாரையும் என்னால் சொல்லவே முடியாது.

ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி குறை கேட்கும் மனப்பான்மை வாய்ந்தவர். ஏன் இப்படி அதிகப்பிரசங்கத்தனமாக நடக்கிறார் என்று ஆரம்பகாலத்தில், அவரது நடவடிக்கைகளை நாங்களே குறை கூறியதுண்டு. ஆனால், அவர் மக்கள் மீது காட்டிய நேசம், பாசம்தான் இன்று அவரது செல்வாக்காக உயர்ந்து நிற்கிறது.

மக்கள் சேவையில் மட்டுமின்றி, கட்சியை எப்படி கட்டுக்கோப்பாக நடத்துவது, தேர்தலை எப்படி சந்திப்பது, பொதுமக்களை எப்படி அணுகுவது, கட்சிப் பொறுப்பை எப்படி நிறைவேற்றுவது, களப்பணி ஆற்றுவது எப்படி என்று அனைவருக்கும் பாடம் நடத்தக்கூடியவர். திறந்தவெளி மீட்டிங், பொதுஜனங்களை அமரவைக்க பாய் போட்டது, சேர் போட்டு மீட்டிங் நடத்தியது போன்ற புதுமைகளையும் செய்தவர் சைதை துரைசாமிதான்.

தான் தொழில்செய்து சம்பாதித்த பணத்தை இன்று மாணவர் நலனுக்காகவும், பொதுமக்கள் நலனுக்காகவும் செலவிட்டு வருகிறார். பொதுமக்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று சிந்திப்பாரே தவிர, நமக்கு என்ன ஆதாயம் கிடைக்கும், எப்படி கிடைக்கும் என்று அவர் ஒருபோதும் சிந்தித்தது இல்லை.

மா.சுப்பிரமணியன் சொல்வது போன்று சைதை துரைசாமி அரசியல் மற்றும் பொதுவாழ்வில் முறைகேடு செய்து ஒரு பைசா கூட சம்பாதித்தது இல்லை என்பது எனக்கு உறுதியாகத் தெரியும் இதை என் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் சொல்லிக்கொள்கிறேன். இதை நான் எந்த இடத்தில் வந்தும், யாரிடத்திலும் சொல்வதற்குத் தயாராக இருக்கிறேன். இன்றைக்கு மக்கள் விரும்புகின்ற வகையில், நேர்மைக்கு இலக்கணமான நல்ல தலைவராக சைதை துரைசாமி இருக்கிறார்.

திமுக கட்சியினரும்கூட, அவர் மீது அபிமானம் வைத்திருக்கிறார்கள் என்பதை, மேயர் தேர்தலின் போது சைதாப்பேட்டை தொகுதியில் மட்டும் அவருக்கு 33,000 வாக்குகள் அதிகம் கிடைத்ததில் இருந்தே அறிந்துகொள்ளலாம். அதனால் நேர்மையான ஒருவர் மீது கல்லெறிந்து பாவத்தை சம்பாதிக்க வேண்டாம் என்று என் கட்சிக்காரர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று  சைதை மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

சைதை மார்டின் பேசும் வீடியோ:

https://www.youtube.com/watch?v=6X8WFq7c15Q&feature=youtu.be