சென்னை: கொரோனா காலக்கட்டத்தில் மக்களுக்கு சேவையாற்றும் வகையில் தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்களை திமுகஅரசு பணி நீக்கம் செய்துள்ளதை எதிர்த்து, மாநிலம் முழுவதும் செவிலியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.  இன்று 6வது நாளாக அவர்களது போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கிடையில், எம்.ஆர்.பி. நர்சுகள் மேம்பாட்டு சங்கத்தைச் சேர்ந்த நர்சுகள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது, பெருந்தொற்றான கொரோனா பரவலின்போது, அதை தடுக்கும் வகையில்,  தடுப்புப் பணிகளுக்காக தொகுப்பூதிய அடிப்படையில் 2400 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்களது டிசம்பர் 31ந்தேதியுடன் முடிவடைந்ததால், அவர்களுக்கு பண்நீட்டிப்பு செய்யாமல், தற்போதைய திமுக அரசு, அவர்களை பணிநீக்கம் செய்து அறிவித்தது. மேலும், அவர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் போன்ற பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

ஆனால், பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களை, தமிழகஅரசின் நடவடிககைக்கு எதிராகவும், தங்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும்எ ன தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சேலம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.

இதையடுத்து சென்னையிலும் செவிலியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.  சென்னை மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகம் முன்  இன்று ஆறாவது நாளாக ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து, செவிலியர்களை பணி நீக்கம் செய்ததற்கு எதிராக போராட்டம் நடத்திய செவிலியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

இதற்கிடையில், எம்.ஆர்.வி. நர்சுகள் மேம்பாட்டு சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் நர்சுகள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள். நேற்று 5-வது நாளாக அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதில் 500-க்கும் மேற்பட்ட நர்சுகள் கலந்து கொண்டனர். சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க தலைவர் ரவீந்திரநாத், டாக்டர் சாந்தி ஆகியோர் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது.

முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பா.ஜனதா துணைத் தலைவர் நாகராஜன் ஆகியோர் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு சென்று நர்சுகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 4 நர்சுகள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து நர்சுகள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.

இதுகுறித்து எம்.ஆர்.பி. நர்சுகள் மேம்பாட்டு சங்கத்தைச் சேர்ந்த அமலடைகோ கூறியதாவது:- நர்சுகளின் இந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது. ஆனாலும் இந்த போராட்டத்தை அடுத்தக்கட்டமாக தொடர் போராட்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். எங்கள் போராட்டம் தொடரும். அரசு எங்களுக்கு பணியை தொடருவதற்கான அரசாணையை தரும்வரை எங்களது போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும் என்றார்.

போராட்டம் நடத்திவரும் ஒப்பந்த செவிலியர்களுக்கு நாம் தமிழர்கட்சி, அதிமுக உள்பட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.