டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் எப்படி சச்சின் உச்சம் தொட்டாரோ, அதேபோல் பந்துவீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன் உச்சம் தொட்டுள்ளார் என்று புகழாரம் சூட்டியுள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் மெக்ராத்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன்தான். இதற்கு முன்னர் இந்த சாதனையை செய்த முரளிதரன், ஷேன் வார்னே மற்றும் கும்ளே ஆகிய மூவரும் சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மெக்ராத் கூறியுள்ளதாவது, “டெஸ்ட்டில் சச்சின் எப்படி பேட்டிங்கில் உச்சத்தை தொட்டாரோ, அதேபோல் பந்துவீச்சில் சாதித்துள்ளவர் ஆண்டர்சன்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினின் உச்சத்தை யாரும் தொட முடியாது. அவர் அடித்த ரன்களாக(15,291) இருந்தாலும் சரி, போட்டிகளின் எண்ணிக்கையாக இருந்தாலும் சரி (200).

ஆண்டர்சனிடம் இருக்கும் திறமை என்னிடத்தில் இல்லை. இருவிதமாகவும் அவர் ஸ்விங் செய்வதைப் பார்க்கும்போது இவரை விடவும் சிறந்த பவுலர் இல்லை என்றே கூற முடிகிறது.” என்றுள்ளார் கிளென் மெக்ராத்.