‘வெண்ணிலா வீடு’ படத்தின் இயக்குநர் வெற்றி மகாலிங்கம், இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘விசிறி.’
புதுமுகங்களான ராஜ் சூர்யா, ராம் சரவணா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்,
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர் தனஞ்செயன், நடிகர் ஆரி, பாடலாசிரியர் மதன் கார்க்கி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதோடு, தமிழக பா.ஜ.க.வின் மாநில துணைத் தலைவரான பி.டி.அரசகுமாரும் கலந்துகொண்டார். ஆமாம்.. அவரும் இந்தப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.
அவரை மேடையில் வைத்துக் கொண்டே, ‘பத்மாவதி’ படம் குறித்த சர்ச்சையை பேசினார் நடிகர் ஆரி.
“கருத்து சுதந்திரம் குறித்து எல்லோரும் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இப்போது நாடு முழுவதுமே கருத்து சுதந்திரம் கேள்விக்குறியாகி வருகிறது.
சம்பந்தப்பட்ட கட்சியின் பொறுப்பாளர் நம்மோடு இங்கே மேடையில் இருக்கிறார். அவரிடம் சொன்னால் நமது பிரதமர் நரேந்திர மோடியிடமே சொன்னது போலாகும். ஆகவே, தயவு செய்து கருத்து சுதந்திரத்தில் கை வைக்க வேண்டாம் என்று இந்த மேடையின் வாயிலாக ஒரு தமிழனாக வேண்டுகோள் வைக்கிறேன்…” என்று அதிரடியாகப் பேசினார் ஆரி.
அடுத்து பேசிய பி.டி.அரசகுமார், “பிரதமர் நரேந்திர மோடி அரசும், தமிழக பா.ஜ.க.வும் கருத்து சுதந்திரத்தில் கை வைப்பதாக சொன்னதற்கு முதலில் பதில் சொல்கிறேன்.
தம்பி விஜய் எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர். அவருக்குத் தமிழகமெங்கும் பல கோடி ரசிகர்களைப் பெற்றவர் அவர்.
அவர் ஒரு விசயத்தைப் பேசுகிறார் என்றால் அது வெகு விரைவாக மக்களை சென்றடையும். இந்த நிலையில் தம்பி விஜய்யால் ஒரு தவறான கருத்து பரவக்கூடாது என்பதால்தான் (மெர்சல் படத்தின் சில காட்சிகளை) நாங்கள் எதிர்த்தோம்…” என்றார்.
அடுத்து பேசவந்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், “ “நான் இன்று இந்த இடத்தில் நிற்கிறேன் என்றால் எனது நேரம் தவறாமைதான் முக்கிய காரணம். ஒவ்வொரு விநாடியையும் பொன்போல மதித்து நடந்தாலே போதும்.. வாழ்வில் வெற்றி பெற்றுவிடலாம். அண்ணன் பி.டி.அரசகுமார், ஒரு நடிகர் ஒரு தவறான கருத்தை பேசும்போது அது எளிதில் மக்களை சென்றடைவதாக பேசினார்.
இதற்கு நான் பல பேட்டிகளில் பதில் சொல்லிவிட்டேன், இருந்தாலும் இந்த மேடையிலும் பதில் அளிக்கிறேன்.
சினிமா வேறு, அரசியல் வேறு, வாழ்க்கை வேறு. சினிமாவில் கொடூரமான வில்லன்களாக நடிப்பவர்கள் நிஜயத்தில் குழந்தை மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதேபோல் நம்மோடு குழைந்து பேசுபவர்கள் சில நேரங்களில் நம் கழுத்தறுத்து விடுவதும் உண்டு.
எம்.ஜி.ஆர் காலத்தில் கலைஞரை கைது செய்தபோது, அதனைக் கண்டித்து ஒரு பக்க அளவிற்கு பத்திரிக்கையில் கண்டனம் தெரிவித்திருக்கிறேன்.
நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் இல்லை.. ஆனால் கலைஞரை பிடிக்கும்.
ஆனால் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் எம்.ஜி.ஆர் தனது நிறுவனத்தில் படம் இயக்க என்னை ஒப்பந்தம் செய்தார். அப்போது அப்படித்தான் அரசியல்வாதிகள் இருந்தார்கள். அரசியலையும், திரைத்துரையையும் வாழ்க்கையையும் பிரித்தறிகிற ஆற்றலும், நம்பிக்கையும் அவர்களிடம் இருந்தது.
ஆனால், இப்போதிருக்கும் அரசியல்வாதிகளுக்கெல்லாம் அந்த பக்குவமும், நம்பிக்கையும் கிடையாது. எங்கே ஏதாவது ஒரு நடிகன் நாடாள வந்துவிடுவானோ என்ற அச்சத்திலேயே இருக்கிறார்கள். அதனால்தான் இவர்களால் சினிமாவையும், அரசியலையும் வேறு வேறாக பிரித்தறிய இயலவில்லை.
இளைஞர்கள் பொதுவெளிக்கு வந்துவிட்டார்கள், இனி எல்லா அரசியல்வாதிகளும் எச்சரிக்கையுடன் இருங்கள். நான் பா.ஜ.க.வையும் சேர்த்துதான் சொல்கிறேன். தமிழர்கள் நாங்கள் ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்கிற கோட்பாட்டில் வாழ்பவர்கள். இங்கு தேவையில்லாமல் ஜாதியையும், மதத்தையும் ஏன் திணிக்கிறீர்கள்…?
நாடாள்கிற ஒரு கட்சியின் முக்கியமான பதவியிலிருக்கும் ஒருவர், பொறுப்பில்லாமல் ஜாதி, மத அடிப்படையிலான கருத்துக்களை வெளிப்படுத்துவது எவ்வளவு மோசமான செயல்..?
இங்கிருக்கிற அரசியல்வாதிகள் எல்லாம் திரைப்படங்களை பார்க்காமலேயே விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள்.
திரைப்படங்களில் எந்த மாதிரியான சூழ்நிலையில் அந்த வசனம் இடம் பெறுகிறது என்பது குறித்து அவர்கள் யோசிப்பதே இல்லை. தயவு செய்து மற்ற மாநிலங்களில் இருப்பது போல் தமிழ் சினிமாவை வாழ விடுங்கள்…”” என்று அதிரடியாக பேசி முடித்தார்.