பரிமலை

ச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி பலத்த பாதுகாப்புடன் மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் வரும் 16 ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்துப் பல மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்த தீர்ப்பில், ”பெண்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமின்றி மற்ற பல வழிபாட்டுத் தலங்களிலும் உள்ளது.  தற்போது இந்த வழக்கில் மதம் சார்ந்த விஷயங்களைக் கவனத்தில் கொண்டோம். ஆனால் இந்த விஷயத்தில் மேலும் சில அம்சங்கள் ஆலோசிக்கப்பட வேண்டிய சூழல் இருப்பதால் இதனை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குப் பரிந்துரைக்கிறோம் எனக் கூறப்பட்டது.

அத்துடன் 7 நீதிபதிகள் உத்தரவு வரும் வரை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது எனவும் தற்போதைய நிலை தொடரும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால் பெண்கள் கோயிலுக்குச் செல்லலாம் என்ற சூழல் தற்போது உள்ளது. கடந்த ஆண்டு இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கேரள அரசு அதனைச் செயல்படுத்த முயன்றபோது அதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து  கேரளாவில் பரவலாக வன்முறைப் போராட்டங்கள் வெடித்தன.

இந்த ஆண்டு மண்டல பூஜை சீசனுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி திறக்கப்படுகிறது. வரும் 16-ம் தேதி மாலை 5.30 மணிக்குத் தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரு தலைமையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையைத் திறந்து வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளனர். அப்போது ஐயப்பன் மேல் சாத்தப்பட்ட விபூதி பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். அன்றுடன் மேல்சாந்தியின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிதாகத் தேர்வான மேல்சாந்தி சுதிர் நம்பூதிரியிடம் கோயில் சாவி ஒப்படைக்கப்பட உள்ளது.

அதற்கு மறுநாள் காலை அதாவது கார்த்திகை முதல் தேதியில் இருந்து 41 நாட்களுக்கும் தொடர்ந்து பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். வரும் டிசம்பர் 27 ஆம் தேதி வரை அதிகாலையில் நிர்மால்ய பூஜை, சந்தன, நெய் அபிஷேகம் லட்சார்ச்சனை, படிபூஜை உள்ளிட்டவை தொடர்ந்து, நடைபெறும். ஆகவே மண்டல பூஜை சீசன் தொடங்க இருப்பதால் சபரிமலையில் அதற்கான ஏற்பாடுகள் முழு அளவில் செய்யப்படு வருகிறது.   உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது.