கேள்விகளுக்கு பெரிய அமர்வு பதில் தரும் வரை சீராய்வு மனுக்கள் நிலுவையில் இருக்கும்: சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

Must read

சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் நிலுவையில் இருக்கும் என்றும், தற்போதைய அமர்வு கேட்டுள்ள கேள்விக்கு பெரிய அமர்வு பதிலளித்த பின், சீராய்வு மனுக்கள் மீது புதிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளிக்கும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என செப்டம்பர் 28, 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்சாந்தி கண்டரரு ராஜீவரரு தரப்பு உட்பட 65 பேர் தரப்பில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இச்சீராய்வு மனுக்கள் மீது, தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சந்திரசூட், கன்வில்கர், இந்து மல்ஹோத்ரா, ரோஹின்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. 5 நீதிபதிகளில் இருவர் பழைய தீர்ப்பு தொடரும் என்றும், மூவர் பெண்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என்றும் கருத்துக்களை தெரிவித்ததால், வழக்கை 7 அல்லது அதைவிட பெரிய அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், கன்வில்கர், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் சேர்ந்து 7 கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதன்படி,

i. அரசியலமைப்பு சட்டத்தின் 25 மற்றும் 26வது பிரிவுகளின் கீழ் உள்ள மத சுதந்திரம் மற்றும் மூன்றாம் பாகத்தின் பிற விதிகள், குறிப்பாக பிரிவு 14 தொடர்பாக தெளிவான விளக்கம் தேவைப்படுகிறது.

ii. அரசியலமைப்பின் 25 (1) வது பிரிவில் உள்ள ‘பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் ஆரோக்கியம்’ எதை குறிக்கிறது ?

iii. ‘ஒழுக்கம்’ அல்லது ‘அரசியலமைப்பு அறநெறி’ பற்றி எவ்வித சட்டமும் வரையறுக்கப்படவில்லை. முன்னுரை குறிப்புகள் மற்றும் மத நம்பிக்கைகளில் அறநெறிகள் மீறப்படுகிறதா ? இவைகளை வரையறுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

iv. இது போன்ற மத ரீதியிலான நம்பிக்கை தொடர்பான விவகாரம் அல்லது மதத்தின் ஒரு பகுதியினர் கடைபிடிக்கும் விதிமுறைகள் குறித்து எந்த அளவுக்கு நீதிமன்றம் தனது விசாரணையை நடத்திட வேண்டும் ?

v. அரசியலமைப்பு சட்டத்தின் 25(2)(b)-ல் குறிப்பிடப்பட்டுள்ள இந்துக்களின் ஒரு பிரிவு என்பது எதை குறிக்கிறது ?

vi. ஒரு குறுப்பிட்ட மத நெறிகளை மத நம்பிக்கை கொண்டவர்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட மத அமைப்புகள் கடைபிடிக்க அரசியலமைப்பு சட்டம் 26 இடம் தருகிறதா ?

vii. ஒரு மதத்தை சேர்ந்த வகுப்பின் நடைமுறைகள் அல்லத சம்பந்தப்பட்ட வழக்கில் தொடர்பில்லாத மதத்தை சேர்ந்தவர்கள் தாக்கல் செய்யும் பொதுநல வழக்குகளை அங்கீகரிப்பதில் நீதித்துறைக்கு அனுமதிக்கப்பட்ட அளவுகோள் என்ன ?

என்று கேட்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்து சமய அறநிலையத்துறை vs ஸ்ரீ லக்ஷ்மிந்திரா தீர்த்த சாமியார் இடையேயான வழக்கில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு, எந்தெந்த மத ரீதியிலான நெறிகளை எல்லாம் சம்பந்தப்பட்ட நபரே வகுத்துக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறது. அதேநேரம், சயீத் ஹசன் அலி vs அஜ்மர் தர்கா கமிட்டி இடையேயான வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, நீதித்துறையின் தலையீடு தேவை என்று கருதியதால் பெரிய அமர்வுக்கும் வழக்கை மாற்றியது. ஆக, கேரள இந்து ஆலைய பொது வழிபாட்டு சட்டம், 1965ல் கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்பு குறித்தும், இதர கேள்விகள் குறித்தும் 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வு தீர்வு காண்டு, முடிவெடுக்கலாம். இவ்வழக்கில் தேவையெனில், அனைத்து மனுதாரர்கள் தரப்பிலிருந்து மீண்டும் புதிதாக வாதங்களை வைக்க வேண்டிய அவசியம் எழுமெனில், அதற்கும் உத்தரவிட்டுக்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், தாங்கள் கேட்டுள்ள கேள்விகளுக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு பதில் அளிக்கும் வரை, சீராய்வு மனுக்கள் தங்கள் அமர்விலேயே நிலுவையில் இருக்கும் என்று தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், 7 நீதிபதிகளின் பதிலுக்கு பின், சீராய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தின் இரண்டு அல்லது மூன்று அல்லது ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, தீர்ப்பளிக்கும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

சீராய்வு மனுக்கள் மீது இறுதி தீர்ப்பு வராத நிலையில், பழைய தீர்ப்பு படி பெண்களை அனுமதிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெஜாரிட்டி நீதிபதிகளான தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கன்வில்கர், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அளித்த தீர்ப்பு வெறும் 9 பக்கங்களுக்கு மட்டுமே உள்ள நிலையில், மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் சந்திரசூட், ரோஹின்டன் பாலி நாரிமன் ஆகியோர் வழங்கிய தீர்ப்பு 68 பக்கங்களுக்கு உள்ளது.

மைனாரிட்டி உத்தரவாக பார்க்கப்படும் இரு நீதிபதிகளின் உத்தரவில், “பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர் மற்றும் மாநில அமைச்சர்கள் உட்பட அனவரும் உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவே செயல்பட வேண்டும். உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணைகளை உண்மையுடனும், நேர்மையுடனும் நிறைவேற்றும் பொறுப்பு எம்.எல்.ஏக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையிலேயயே உள்ளது.

இத்தீர்ப்பு தொடர்பாக தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள் வாயிலாக விளம்பரத்தை கேரள அரசு கொடுத்து, சட்டத்தை நிலைநிறுத்த உறுதியேற்க வேண்டும். இது தொடர்பாக கேரள அரசு தேவசம்போர்டு நிர்வாகிகளுடன் ஆலோசித்து, அனைவருடைய ஒருமித்த கருத்துடன் தீர்ப்பை நிறைவேற்றி, அதில் எல்லோருடைய பங்கும் இருப்பது போல பாதுகாத்திட வேண்டும். இந்த தீர்ப்பை ஒதுக்க தனிச்சட்டம் போடும் முடிவை அரசு கைவிட வேண்டும். அமைதியையும், தனி மனித உரிமைகளையும் பாதுகாக்கும் வண்ணம் கேரள அரசு இத்தீர்ப்பை அமல்படுத்தும் என்று நம்புகிறோம். இது தொடர்பான வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய அமர்வில் முன்னாள் தலைமை நீதிபதியான தீபக் மிஷ்ரா ஓய்வு பெற்ற நிலையில், இந்து மல்ஹோத்ராவை தவிர அப்போது மற்ற நீதிபதிகள் பெண்களை அனுமதிப்பது தவறில்லை என்று உத்தரவிட்டிருந்தனர். ஆனால் தற்போதைய தீர்ப்பில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உடன், முந்தைய தீர்ப்பில் எவ்வித மாற்றமும் இன்றி, பெண்கள் அனுமதிக்கப்படுவதற்கு எதிராக இந்து மல்ஹோத்ரா தொடர்ந்து உடன் நிற்கிறார். இதில் தற்போது புதிதாக நீதிபதி கன்வில்கரும் இணைந்துள்ளார். முந்தைய தீர்ப்பில் இருந்து, தற்போதைய மாற்றத்திற்கான காரணம் குறித்து நீதிபதி கன்வில்கர் தீர்ப்பில் எதுவும் குறிப்பிடவில்லை. அதேநேரதம், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதோடு, வழக்கை இழுத்தடிக்கும் நோக்கத்திலும் இருப்பதாக சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article