திருவனந்தபுரம்: பிரசித்திபெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை பூஜையுடன் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மாசி மாத பூஜைசைக்காக பிப்ரவரி மாதம் நடை திறக்கப்பட உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையைத் தொடர்ந்து, மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி முதல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு பக்தர்கள் வருகை தந்தனர். பக்தர்கள் கூட்டம் அலைமோரியதால், ஆன்லைன் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்ததுடன், பாதுகாப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை கேரள மாநில அரசு திறமையாக செய்தது.
அதன் படி,லட்சக்கணக்கான பக்தர்களுடன் ஜனவரி 14ந்தேதி மகரவிளக்கு ஜோதி பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த முடிந்த பின்பும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்களுக்காக ஜனவரி 19ஆம் தேதி வரை சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தங்க ஆபரணத்தில் ஜொலிக்கும் ஐயப்பனை தரிசிக்க நேற்று கடைசி நாள் என்பதால் சபரிமலையில் அதிக அளவிலான பக்தர்கள் குவிந்தனர். அதைத்தொடர்ந்து, இரவு 10 மணிக்கு மாளிகைபுரத்தம்மன் குருதி நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (ஜனவரி 20ஆம் தேதி) காலை 6.30 மணிக்கு காலை மன்னர் தரிசனம் செய்ததும், காலை 7 மணிக்கு கோவில் நடை மூடப்பட்டது.
மீண்டும் மாசி மாத பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை வரும் பிப்ரவரி 12ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. பிப்ரவரி 17ந்தேதி வரை 6 நாட்கள் பக்தர்கள் சபரிமலைக்கு வர அனுமதி வழங்கப்படும்.
மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக ஜனவரி 12ம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய காணிக்கை மட்டும் ரூ.310.4 கோடியாகும். ஜனவரி 17ம் தேதி நிலவரப்படி ஐயப்பன் கோயில் உண்டியல் வருமானம் ரூ.315.46 கோடி என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.