சபரிமலை
சபரிமலை கோவில் ஆடி மாத பூஜைகளுக்காகத் திறக்கப்பட்டு தினசரி 5000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இரண்டாம் அலை கொரோனா தாக்குதலால் கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. அதன் பிறகு கடந்த மாதம் 17 ஆம் தேதி முதல் பரவல் குறைவாக உள்ள பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அந்த பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஆடி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் வரும் 16 ஆம் தேதி மாலை 5 மணிக்குத் திறக்கப்படுகிறது. வரும் 17 ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. இந்த அனுமதி நடை அடைக்கப்படும் நாளான 21 ஆம் தேதி வரை அதாவது 5 நாட்களுக்கு அளிக்கப்பட உள்ளது.
இந்த அனுமதி தினசரி ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் 5000 பக்தர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு பதிவு செய்யாதோருக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 48 மணி நேரத்துக்குள் சோதிக்கப்பட்டு அளிக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் அவசியம் ஆகும்.