டில்லி:

பரிமலை மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதி மன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின்போது வழக்கறிஞர்கள் காரசாரமாக வாதங்கள் எடுத்து வைத்தனர். “சபரிமலையில் பின்பற்றப்படுவது பாரம்பரியம்… தீண்டாமை அல்ல என்று கூறப்பட்டது.

விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதி மன்றம் கடந்தஆண்டு (2018)  செப்டம்பர் 28ம் தேதி  உத்தரவிட்டது. இது கேரளா முழுவதும் அதிர்வலை களை ஏற்படுத்திய நிலையில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.  பந்தளம் ராஜ குடும்பத்தினர், முதன்மை தந்திரி குடும்பத்தினர் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து பொது மக்களுடன் சேர்ந்து போராட்டங்கள் நடத்தினர்.

தேசிய ஐயப்ப பக்தர்கள் அமைப்பு சார்பில் அதன் தலைவர் ஷைலஜா விஜயன் உள்ளிட்டோர் சார்பில் மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.மேலும் பாஜக, காங்கிரஸ், மற்றும் இந்து அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தினர். உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து  48 சீராய்வு மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்டன. இதன்மீதான விசாரணை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காரசார மாக விசாரணை நடைபெற்றது.

இதற்கிடையில்  மலப்புரத்தை சேர்ந்த கனக துர்கா மற்றும் கோழிக்கோட்டினை சேர்ந்த பிந்து அம்மிணி என இரண்டு பெண்கள் மாநில அரசின் காவல்துறை பாதுகாப்புடன் அதிகாலை 3 மணி அளவில்   சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்தனர். இது மேலும் பிரச்சினையை பெரிதாக்கியது.

இந்த நிலையில்    தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ஆர்.எஃப். நரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்த்ரசூட், மற்றும் இந்து மல்ஹோத்ரா அடங்கிய அமர்வு முன்பு மறுசீராய்வு மனுக்கள் விசாரணை தொடங்கியது

யார் முதலில் வாதத்தை தொடங்குகிறீர்கள்? என நீபதிகள் கேள்வி எழுப்பியதும், சபரிமலை தந்திரி தரப்பில் பேசிய மூத்த வழக்கறிஞர் வி.கிரி, `பிரம்மசர்யம் என்பது ஐய்யப்பன் மட்டுமே கொண்ட தனிச் சிறப்பு. அவரின் அந்தச் சிறப்பு காக்கப்பட வேண்டும். இத்தனை வருடங்களாக சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் யாரும் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக கேள்வி எழுப்பவில்லை. தற்போது நீதிமன்றத்தில் எந்த பக்தரும் மனுத்தாக்கல் செய்யவில்லை’ என வாதிட்டார்.

பிறகு தேவசம் போர்டு முன்னாள் தலைவர் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, `சபரிமலை கோயிலில் பின்பற்றப்படும் மத நம்பிக்கையினால் மட்டுமே குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் அனுமதி மறுக்கப்படுகிறார்களே தவிர சாதி, தீண்டாமை அடிப்படையில் இல்லை’ எனக் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ரோகிண்டன் நாரிமன், `மதம் என்பது ஒரு நம்பிக்கை. இந்து மதத்தில் உள்ளவர்கள் சில விஷயங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெறும் தீண்டாமை விஷயத்தைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதில்லை. அதில் உள்ள பல விஷயங்களை நன்கு ஆராய்ந்த பிறகே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.

நாயர் சொசைட்டி சர்வீஸ் சார்பில் வாதாடிய  மூத்த வழக்கறிஞர் கே. பராசரன் வாதம் செய்தார். அப்போது,  சபரிமலையில் பின்பற்றப்படுவது பாரம்பரியம் தீண்டாமை அல்ல என்றும்,  சபரிமலை ஐயப்பன் கோவிலில் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியம் வேறானது. இந்த பாரம்பரியத்துடன் பெண்களின் அனுமதியை இணைத்து பார்க்கக் கூடாது. இந்திய மக்கள் தங்களின் பாரம்பரியத்தை பின்பற்ற அவர்களுக்கு உரிமை இருப்பதை அரசியல் சட்டம் உறுதி செய்கிறது என்று குறிப்பிட்டார்.

கேரள அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர்,  அரசியலமைப்பைக் குலைக்கும் வகையில் நடக்கும் எந்த நிகழ்வாக இருந்தாலும் அதை அரசு அனுமதிக்காது. அரசியல் சாசனத்துக்கு எதிராகக் கடைபிடிக்கப்படும் மத நம்பிக்கைகளில் நீதிமன்றம் கண்டிப்பாக தலையிடலாம். அதனால் முன்னதாக வழங்கிய தீர்ப்பை மாற்றத் தேவையில்லை ’சபரிமலை தொடர்பாக தொடரப்படும் எந்த விதமான மறுபரிசீலனை மனுக்களையும் நிச்சய மாக கேரள அரசு எதிர்க்கும் என தெரிவித்தார்.

தேவசம்போர்டு சார்பாக வழக்கறிஞர்,  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை நாங்கள் பின்பற்றுவோம் என்று கூறினார். மேலும்  நாங்கள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை மதித்து பெண்களின் கோவில் வருகையை ஆதரித்தோம் என்றும் கூறினார்.

பெண்களுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், தன்னுடைய வாதத்தில் “19ம் நூற்றாண்டின் முற்பாதி வரை ஆங்கிலத்தில் ”அன்டச்சபிளிட்டி” என்ற வார்த்தையே இல்லை என்று வாதிட்டார்.

`கோயிலுக்குள் நுழைய அனைவருக்கும் உரிமை உண்டு. சமத்துவத்தின் அடிப்படையில் அனைவரும் ஒன்றுதான். எனவே 10 முதல் 50 வயதுப் பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்க லாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம்.

இந்து மதத்தில் பெண்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவது இன்றியமையாதது. வாழ்வில் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் நுழையும்போது எங்களின் நிலைப்பாட்டையும் மாற்றிக்கொள்கிறோம்’ எனத் தெரிவித்தனர்

. `இரு பெண்கள் கோயிலுக்குள் சென்று திரும்பியதும் கோயில் முழுவதும் தூய்மை செய்யப்பட்டுள்ளது. சபரிமலை சென்ற இரு பெண்களுக்கு எதிராக சமூகப் புறக்கணிப்பு நடைபெறுகிறது’ என வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வாதிட்டார்

வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்தி வைப்பதாக உச்சநீதி மன்றம் தெரிவித்து உள்ளது.

தீர்ப்பின்போது சபரிமலைக்கு பெண்கள் அனுமதியா இல்லையா என்பது தெரியவரும்.