லபுரம்

பரிமலைக்கு சென்றதால் புகுந்த வீட்டில் இருந்து விரட்டப்பட்ட கனகதுர்கா என்னும் பெண் அவர் கணவர் வீட்டுக்கு செல்ல கிராம நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் கடும் போராட்டம் எழுந்தது. அதை ஒட்டி சபரிமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. பல பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்நிலையில் ஜனவரி 2 ஆம் தேதி 40 வயதை நெருங்கும் இரு பெண்கள் காவல்துறையினர் உதவியுடன் தரிசனம் செய்து திரும்பினர்.

கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து மற்றும் மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்க்கா ஆகிய இருவரும் அவ்வாறு சபரிமலை சென்றவர்கள் ஆவார்கள். கனகதுர்க்கா மலப்புரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பி சென்ற போது அவரை வீட்டுக்குள் விட அவர் மாமியார் சுமதி மறுத்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் நடந்த கைகலப்பில் கனகதுர்க்காவை சுமதி தலையில் கட்டையால் அடித்ததாக கூறப்படுகிறது.

அவரை வீட்டுக்குள் அனுமதிக்க கனகதுர்க்காவின் கணவரும் மறுப்பு தெரிவித்துள்ளார். அதை ஒட்டி அவர் ஒரு அரசு விடுதியில் தங்க வைக்கப்பட்டார். கடந்த மாதம் 22 ஆம் தேதி கனகதுர்க்கா தன்னை கணவர் வீட்டில் அனுமதிக்கக் கோரி கிராம நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கிராம நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பில் குடும்ப வன்முறையில் பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005 இன் கீழ் அவர் கணவர் வீட்டுக்கு செல்லலாம என கூறப்பட்டது. அதை ஒட்டி அவர் நேற்றிரவு ஏழு மணிக்கு அவருடைய கணவர் வீட்டுக்கு சென்றார். அவருடைய கணவர் தனது குழந்தைகளுடன் வீட்டை விட்டு சென்று விட்டதாகவும் பக்கத்து வீட்டில் சாவியை கொடுத்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

தற்போது கணவர் வீட்டில் தனியே வசித்து வரும் கனகதுர்க்கா தாம் இந்த தீர்ப்பினால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் விரைவில் குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் சரியாகும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.