டில்லி,
பிரசித்தி பெற்ற ஸ்தலமான ஐயப்பன் கோயிலுக்கு பெண்களை அனுமதிக்கலாம் என்று கேரள அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறி உள்ளது.
இது ஆன்மிகவாதிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்தலமான சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள். இங்கு பொதுவாக பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. குழந்தைகளும், 50வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே அதற்கான ஆதாரங்கள் சமர்பித்து ஐயப்பனை தரிசிக்க முடியும்.
10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சபரிமலை கோயில் அமைந்த காலம் முதல் இந்த நடைமுறை காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதை எதிர்த்தும், பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்க கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘சபரிமலைக்கு செல்ல, பெண்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கூறி இருந்தனர்
ஆனால், இந்த கோரிக்கைக்கு சபரிமலை தேவசம்போர்டு எதிர்ப்பு தெரிவித்தது. ஆலயத்தில் கடை பிடிக்கப்படும் நடைமுறைகள், பக்தர்களின் நம்பிக்கை சார்ந்த விஷயமாகும், அதில் கோர்ட்டு தலையிடக்கூடாது என்று கூறியது.
ஆனால், அதை ஏற்காத நீதிபதிகள், ‘‘சனாதன தர்மத்தின் அடிப்படையில் ஆண்களும் பெண்களும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும். தாய்மைக்கு எங்காவது பாரபட்சம் காட்ட முடியுமா? ஆண்–பெண்ணுக்கு இடையேயான பாரபட்சம் சரித்திர ரீதியாக எப்போது தொடங்கியது?’’ என்றும் கேள்வி எழுப்பினர்.
மேலும், கோவில் என்பது அனைவருக்கும் பொதுவான புனித தலமாகும். அங்கு பெண்களுக்கு மட்டும் அனுமதி மறுப்பது பெண்களின் அடிப்படை உரிமையை மறுப்பதாக தெரிகிறது என்று கருத்து தெரிவித்தனர். இதுகுறித்து கேரள அரசுக்கு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இதைதொடர்ந்து, வழக்கு அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்பட்டு, நவம்பர் 7ம்தேதி விசாரிக்கப்படும் என்று வழக்கை தள்ளி வைத்தனர்.
இநத் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கேரள அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்க தயார் என்று பதில் அளித்துள்ளது.
ஏற்கனவே இந்த வழக்கில், காங்கிரஸ் ஆண்டபோது, அரசு எடுத்திருந்த முடிவுக்கு மாறாக, தற்போதைய பினராய் விஜயன் தலைமையிலான கம்யூனிச அரசு மாற்றி பதில் அளித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள சிங்கனாப்பூரில் உள்ள சனிபகவான் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கோரி போராட்டங்கள் நடைபெற்றன. கடைசியில் நீதிமன்ற உத்தரவுப்படி பெண்களும் அந்த கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.