வரும் நவம்பர் மாதம் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருக்கும் சார்க் மாநாட்டை இந்தியா, ஆப்கானிஸ்தான், பூடான், வங்கதேசம் ஆகிய நாடுகள் புறக்கணித்ததையொட்டி பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி உருவாகியுள்ளது.
saarc
பிராந்திய ஒத்துழைப்பும், அண்டை நாட்டில் தீவிரவாத செயல்களை ஊக்குவித்தலும் ஒருங்கிணைந்து செல்ல முடியாது எனவே பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் மாநாட்டை புறக்கணிக்கிறோம் என்று இந்தியா ஏற்கனவே அறிவித்துவிட்டது.
இதைத் தொடர்ந்து வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளும் சார்க் மாநாட்டை புறக்கணிக்கவிருக்கின்றன. இது தொடர்பாக நேபாளத்தில் உள்ள சார்க் தலைமையகத்துக்கு வங்கதேச அரசு அனுப்பியுள்ள கடிதத்தில் சார்க் அமைப்பை உருவாக்கிய நாடு என்ற வகையில் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பான பணிகளை நிறைவேற்றுவதில் வங்கதேசம் உறுதியாக உள்ளது. ஆனால், பரஸ்பர உறவுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் ஒருநாடு தலையீடு வளர்ந்துவரும் நிலையில் சார்க் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் சூழல் தற்போது இல்லை என்பதால் இந்த மாநாட்டில் வங்கதேசம் பங்கேற்காது என குறிப்பிட்டுள்ளது.
பல முக்கிய உறுப்பு நாடுகளின் புறக்கணிப்பையடுத்து இம்முறை 19-வது சார்க் மாநாடு இஸ்லாமாபாத்தில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.