சென்னை 

தமிழக திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவராக ஆர் வி உதயகுமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

நேற்று 2024-26-ம் ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல், சென்னை வடபழனியில் நடந்தது. தலைவர், துணைத் தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர் என மொத்தம் 27 பதவிகள் கொண்ட இந்த சங்க தேர்தலுக்கான வேட்பு மனு கடந்த 1-ந்தேதி முடிந்தது.

ஏற்கனவே ஆர்.கே. செல்வ மணி மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று ஏற்கெனவே கூறிவிட்டார். ஆகவே செயலாளராக இருந்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் தலைவர் பதவிக்கு வேட்புமனு செய்தார்.  மேலும் பொதுச்செயலாளர் பதவிக்கு இயக்குநர் பேரரசு, பொருளாளர் பதவிக்கு இயக்குநர் சரண் ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர்.

தவிரத் துணைத் தலைவர் பதவிகளுக்கு அரவிந்த் ராஜ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரும் இணை செயலாளர் பதவிகளுக்குச் சுந்தர் சி., எழில், ஏ.வெங்கடேஷ் ஆகியோரும் மனு செய்தனர். இவர்களை தவிர மேற்கண்ட பதவிகளுக்கு யாரும் மனுத் தாக்கல் செய்யாததால் இவர்கள் 8 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இயக்குநர் பிரிவு செயற்குழு உறுப்பினர்களாக ராஜகுமாரன், ஆர் மாதேஷ், மனோஜ் குமார், மித்ரன் ஆர்.ஜவஹர், எஸ்.பிரபு, எம்.ராஜ்கபூர், ஆர்.கண்ணன், என்.எஸ்.ரமேஷ் கண்ணா, சி.ரங்கநாதன், சரவணன் சுப்பையா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் அனைவரும் இன்று  காலை சென்னை வடபழனியில் உள்ள இசைக்கலைஞர்கள் சங்கத்தில் பதவியேற்றனர்.