திருப்பூர்:
புகழ்பெற்ற சிவன் மலை, “ஆண்டவன் உத்திரவு பெட்டி”யில் ருத்திராட்ச மாலை வைக்கப்பட்டுள்ளதை அடுத்து, நாட்டில் சாமியார்களின் செல்வாக்கு உயருமா அல்லது வீழ்ச்சி அடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் உள்ளது சிவன்மலை. இங்குள்ள முருகன் கோயில் மிகப்பிரசித்தி பெற்றது. இக் கோயிலில் உத்தரவு பெட்டி என்று ஒன்று உண்டு.
இது குறித்து இப்பகுதி மக்கள் சொல்வதாவது:
“சிவன் மலையில் குடிகொண்டிருக்கும் முருகனஅ திடீரென யாரேனும் ஒரு பக்தரின் கனவில் வந்து, தான் விரும்பும் ஒரு பொருளை சொல்வார். அந்த பொருளை, கோயிலில் இருக்கும் பெட்டியில் வைப்போம்.
அந்த காலகட்டத்தில் அந்த பொருளால் மிகப்பெரிய நன்மையோ, தீமையோ ஏற்படும். அல்லது அப்பெருள் மிக அதிகமாக கிடைப்பதோ, அருகிப்போவதோ நடக்கும்.
அதாவது தண்ணீரை வைக்கச் சொல்லி உத்தரவு வந்தால், அந்த காலகட்டத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். அல்லது பஞ்சம் தீர்ந்து பெருவெள்ளம் ஏற்படும்.
அப்படி ஒரு முறை தண்ணீரை வைக்கச்சொல்லி உத்தரவு வந்தபோதுதான் சுனாமி ஏற்பட்டது. மஞ்சள் வைக்கச் சொல்லி உத்தரவு வந்தபோது, மஞ்சள் விலை உச்சத்தைத் தொட்டது.
சமீபத்தில் ஒரு பக்தரின் கனவில் வந்த உத்தரவுப்படி இரும்புச்சங்கிலி வைக்கப்பட்டது” என்கிறார்கள்.
இந்த நிலையில், சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியைச் சேர்ந்த எஸ்.சங்கர் சுப்பிரமணியம் என்ற பக்தரின் கனவில் கடந்த செவ்வாய்க்கிழமை சிவன்மலை முருகன் தோன்றி 108 ருத்ராட்சம் வைத்து சிறப்பு பூஜை செய்யும்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. எனவே, ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த இரும்புச் சங்கிலி நீக்கப்பட்டு, தற்போது ஒரு சிறிய பையில் 108 ருத்ராட்சங்கள் வைக்கப்பட்டுள்ளன.
“உத்திராட்சம் என்பது சாமியார்கள் அணிவது. தற்போது இது வைக்கப்பட்டுள்ளதால் நாட்டில் சாமியார்களுக்கு ஆபத்து ஏற்படலாம். மதவெறி காரணமாக அவர்கள் தாக்கப்படலாம். அல்லது போலிச் சாமியார்கள் சிறை செல்ல நேரிடலாம்.
அதே நேரம் இதற்கு எதிர்மாறாக நடக்கவும் வாய்ப்பு உண்டு. தற்போது உபி. மாநிலத்தில் சாமியார் ஒருவர் முதல்வர் பதவி ஏற்றிருக்கிறார். அது போல நாடு முழுதும் கூட சாமியார்களுக்கு பெரும் செல்வாக்கு ஏற்படலாம்.
ஆக, இந்த காலகட்டம் சாமியார்களுக்கும் பெரும் சாதகமாகவோ அல்லது பெரும் வீழ்ச்சியாகவோ இருக்கும்” என்று ஆச்சரியம் கலந்த எதிர்பார்ப்புடன் சொல்கிறார்கள் கொங்கு பகுதி மக்கள்.