தேர்தல் ஆணையம் நோட்டீஸ்: ஆர்.கே. நகர்: ஓ.பி.எஸ் அணி வேட்பாளருக்கு சிக்கல்

Must read

 

டில்லி:

ர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக  ஓ.பி.எஸ். அணி (புரட்சித்தலைவி அம்மா கட்சி) வேட்பாளர் மதுசூதனன், மின் கம்பம் சின்னத்தை இரட்டை இலை போல் சித்தரித்து பிரசாரம் செய்வதாக எதிரணி புகார் செய்தது. இது குறித்து மதுசூதனனுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருக்கிறது தேர்தல் ஆணையம்

ஆர்.கே. நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அதிமுக சார்பில்,சசிகலா, ஓ.பி.எஸ். என இரண்டு அணிகளும் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றன.   இருவரும் வாக்காளர்களை கவர தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளதால் பன்னீர் செல்வம் தலைமையிலான (அதிமுக புரட்சித் தலைவி அம்மா) அணி, இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்திலும், சசிகலா தலைமையிலான (அதிமுக அம்மா) அணி தொப்பி சின்னத்திலும் போட்டியிடுகின்றன.

இந்த நிலையில், ஓ.பி.எஸ். அணி வேட்பாளரின் மின்கம்பம் சின்னத்தை முடக்க வேண்டும் என சசிகலா அணி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

அதில் பன்னீர்செல்வம் அணியினருக்கு ஒதுக்கப்பட்ட இரட்டை மின் கம்பம் சின்னத்தை இரட்டை இலை போல வடிவமைத்து மக்களை குழப்பி பொய் பிரசாரம் செய்து வருவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதையடுத்து ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் இந்த புகார் குறித்து வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி காலை 9 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

ஆகவே தற்போது இந்த விவகாரம் குறித்து தகுந்த விளக்கம் அளிக்க வேண்டிய நிலையில் ஓ.பி.எஸ். அணி இருக்கிறது.  ஏற்கெனவே இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்காமல் முடக்கப்பட்ட நிலையில், தற்போது  இரட்டை மின்கம்ப சின்னத்துக்கும் சிக்கல் வந்திருக்கிறது.

More articles

Latest article