டில்லி,

ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் அறிவித்துள்ளது. தற்போது வழங்கி வரும் இலவச சேவையை மேலும் 15 நாட்கள் நீட்டித்துள்ளது.

ஜியோவின் பிரைம் மெம்பர்ஷிப்பில் சேராத வாடிக்கையாளர்கள் இந்த 15 நாட்களுக்குள் தங்களை உறுப்பினராக்கி கொள்ளவும், அவ்வாறு உறுப்பினர்களானவர்களுக்கு 303 ரூபாய்க்கு 3 மாதம் சேவை கிடைக்கும் என்றும் அதிரடி அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை நேற்று இரவு ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே, பிரைம் மெம்பர்சிப் பிளான் நேற்றுடன் (மார்ச் 31)  முடிவடைவதாக இருந்தது. தற்போது இது ஏப்ரல் 15ந்தேதி வரை மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் முகேஷ் அம்பானி ஜியோவை அறிவித்தது முதல் மார்ச் 31 வரை வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டோ இலவசமாகவே வழங்கப்பட்டு வந்தது.

இதன் காரணமாக சுமார் 10 கோடி பேர் ஜியோவின் வாடிக்கையாளர்களாக மாறினார்கள்.

இந்நிலையில், ஏப்ரல் 1 முதல் 99 ரூபாய் செலுத்தி பிரைம் மெம்பர்ஷிப் ஆக வேண்டும் என்றும், அதன்பிறகு மாதந்தோறும் 303 செலுத்தி தினசரி 1 ஜிபி வீதம் 30 ஜிபி டேட்டா வழங்குவதாகவும் அறிவித்திருந்தது.

ஆனால், வாடிக்கையாளர்கள் ஜியோவில் தொடர விருப்பம் காட்டவில்லை. மேலும் பல இடங்களில் ஜியோவின் சிக்னல் குறைபாடு மற்றும், மாதம் 303 கட்ட வேண்டும் என்று ஜியோ அறிவித்தது காரணமாக வாடிக்கையாளர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.

ஜியோவின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இல்லாததாலும், மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் ஜியோவுக்கு போட்டியாக சலுகைகள் அறிவித்து வருவதாலும், ஜியோவின் வாடிக்கையாளர்கள் சுமார் 25 சதவிகிதத்தினர் மட்டுமே பிரைம் மெம்பர்ஷிப்பில் இணைந்தனர்.

இதன் காரணமாக அதிர்ச்சி அடைந் ஜியோ நிர்வாகம்,  தற்போது பிரைம் மெம்பர்ஷிப்பில் சேர மேலும் 15நாள் அவகாசமும், அவ்வாறு உறுப்பினர்களாக பதிவு செய்பவர்களுக்கு 303 ரூபாய்க்கு 3 மாதம் அனைத்து சேவைகளும்  இலவசம் என்றும் அறிவித்து உள்ளது.

ஜியோவின் நெட்வொர்க் பிரச்சினைகளை ஒப்புக்கொண்ட அம்பானி, ஜியோவின் நெட்வொர்க் சேவை மேலும் விரிவாக்கப்படும் என்றும் தொடர்ந்து வரும் வாரங்களில் சேவை தரம் வியத்தகு முன்னேற்றம் ஏற்படும் என்றும்  உறுதியளித்துள்ளார்.

தற்போது நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் அளவிலான ஜியோ தொலைதொடர்பு கோபுரங்கள் மூலம் 4ஜி, பிராட்பேன்ட் சேவைகளை வழங்கி வருகிறது. இத்துடன் மேலும் 1 லட்சம் கோபுரங்கள் நாடு முழுவதும் நிறுவ ஜியோ முடிவெடுத்துள்ளது என்றும் இன்னும் ஒருசில மாதங்களில் இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிடும் என்றும் கூறியுள்ளது.

இதற்காக மேலும் ரூ 200,000 கோடி  முதலீடு செய்வதாகவும், இந்த பச்சைப்புல்வெளி முதலீடு உலகின் மிகப்பெரியது என்றும் அம்பானி, கூறி உள்ளார்.