2022 பிப் 24 ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா சிறப்பு ராணுவ நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்தது. அறிவிப்பு வெளியான ஒரு சில நிமிடங்களில் தொடங்கிய தாக்குதலில் உக்ரைன் நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்த இலக்குகளை அழித்தது ரஷ்யா.

தாக்குதல் தொடங்கிய மூன்றாவது நாள் உக்ரைன் நாட்டில் இணைய சேவை முற்றிலும் முடங்கியது.

இதனை அடுத்து எலான் மஸ்கின் உதவியை கோரினார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.

உக்ரைன் அதிபரின் கோரிக்கையை ஏற்று எலான் மஸ்கின் ஸ்டார் லிங்க் நிறுவனம் இணைய சேவையை வழங்கியது.

10 நாட்களாக தொடரும் தாக்குதலில் உக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை சுற்றி வளைத்துள்ளது ரஷ்ய ராணுவம்.

இங்குள்ள அப்பாவி மக்களை வெளியேற்ற தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சில நகரங்களில் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது ரஷ்யா.

மேலும், உக்ரைன் நாட்டில் செயல்பட்டு வரும் இணைய தளம், தகவல் தொடர்பு சேவைகள் அனைத்தையும் ரஷ்யா முடக்கி வருகிறது.

இந்நிலையில், எலான் மஸ்க் தனது ஸ்டார் லிங்க் இணைய சேவையையும் முடக்க ரஷ்யா முயற்சி மேற்கொள்ளும் ஆபத்து உள்ளது என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தவிர, ஸ்டார் லிங்க் மட்டுமே தற்போது உக்ரைனில் இணைய சேவை வழங்கி வரும் நிலையில் ரஷ்ய ஹேக்கர்களால் அது எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்று எச்சரித்துள்ளார்.