உக்ரைன் நாட்டின் கிழக்கு மாகாணங்களான டொனேட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்களை ரஷ்யா தனி நாடாக அங்கீகரித்ததைத் தொடர்ந்து ரஷ்ய வங்கிகள் மற்றும் ரஷ்ய அரசாங்க கஜானாவை நிரப்பும் பெருமுதலாளிகளுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடைவிதித்துள்ளன.
ஐரோப்பிய நாடுகளின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் ரஷ்யாவில் இருந்து ஜெர்மனிக்கு கடல் வழியே அமைக்கப்பட்டு வரும் நார்ட் ஸ்ட்ரீம் 2 திட்டத்தை ஜெர்மனி நிறுத்திவைக்கப் போவதாக அறிவித்துள்ளது.
பெட்ரோலிய பொருட்களை உற்பத்தி செய்யும் உலகின் முன்னணி நாடான ரஷ்யா ஐரோப்பாவின் எரிசக்தி தேவையை 41 சதவீதம் பூர்த்தி செய்கிறது.
ஐரோப்பிய நாடுகளின் தேவையில் 5 சதவீதம் மட்டுமே வழங்கிவந்த அமெரிக்கா தனது வர்த்தகத்தை 23 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
ரஷ்ய வங்கிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை காரணமாக பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிவாயு விலை உலக சந்தையில் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை 101 ரூபாயாகவும் சமையல் எரிவாயு விலை 915 ரூபாயாகவும் உள்ள நிலையில் ரஷ்யா மீது மேற்கத்திய பணக்கார நாடுகள் விதித்திருக்கும் இந்த தடையால் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளை வெகுவாக பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
கோதுமை ஏற்றுமதியில் உலகின் நெம்பர் 1 நாடாக உள்ள ரஷ்யா மற்றும் நான்காம் இடத்தில் உள்ள உக்ரைன் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் காரணமாக கோதுமை இறக்குமதி செய்யும் மூன்றாம் உலகநாடுகள் கவலையடைந்துள்ளன..
மேலும், உக்ரைன் உடனான போர் தீவிரம் அடைந்தால் ஐரோப்பாவில் இருந்து கருங்கடல் வழியே உலக நாடுகளுக்கு வரவேண்டிய தானியங்கள் உள்ளிட்ட சரக்கு போக்குவரத்தில் தேக்க நிலை ஏற்பட வாய்ப்பிருப்பதால் உணவு தானிய பொருட்களின் விலையும் பல மடங்கு உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்திய மாணவர்கள் உக்ரைனை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் இந்திய தூதரகம் இன்று மீண்டும் அறிவிப்பு