மாஸ்கோ: ரஷிய பள்ளியில் இன்று நடைபெற்ற திடீர் துப்பாக்கி சூட்டில் 7 குழந்தைகள் உள்பட 13 பேர் பலியாகி உள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரணியாவின் உட்முர்டியா பகுதியில் உள்ள இஷெவ்ஸ்க் என்ற இடத்தில் உள்ள பள்ளி ஒன்றில், துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 7மாணாக்கர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 21 பேர் காயமடைந்து உள்ளனர்.  துப்பாக்கி சூடு நடத்திய நபரும், தன்னைத்தானே சுட்டுக் கொண்டு  தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ரஷிய தலைநகர்  மாஸ்கோவிற்கு கிழக்கே 600 மைல் தொலைவில் உள்ள உட்முர்டியா பிராந்தியத்தின் தலைநகரான இஷெவ்ஸ்கில் உள்ள பள்ளியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதற்கான காரணம் தெரியவில்லை  என்றும்,  துப்பாக்கிதாரி பலாக்லாவா மற்றும் நாஜி சின்னங்கள் கொண்ட கருப்பு டி-சர்ட்டை அணிந்திருந்தார் என்றும், அவர் யார் என்று இதுவரை அடையாளம் காணவில்லை  இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த பள்ளி 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருவதாகவும், துப்பாக்கி சூடு நடைபெற்றதும், மற்ற குழந்தைகள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, காவல்துறையினர், அதைச் சுற்றியுள்ள பகுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில ஆளுநர் கூறினார்.

இந்த துப்பாக்கி சூட்டில், இரண்டு ஆசிரியர்கள், இரண்டு பாதுகாவலர்கள், 7 குழந்தைகள் பலியாகி உள்ளதாகவும், மேலும் 21 பேர் காயமடைந்துள்ளதாகவும், அதில்,  14 குழந்தைகள் மற்றும் ஏழு பெரியவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ள்ளனர்.  பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.