வாஷிங்டன்:
அணு சக்தி இல்லாத மிக சக்தி வாய்ந்த வெடிகுண்டை ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க வீசியதாக அமெரிக்கா தெரிவித்து வருகிறது.
இந்த வெடிகுண்டை வெடிகுண்டுகளின் தாய் என்று அமெரிக்கா கூறி வருகிறது. ஆனால் இதையெல்லாம் மிஞ்சும் வகையில் வெடிகுண்டுகளுக்கெல்லாம் ‘‘தந்தை’’ வெடிகுண்டை ரஷ்யா வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளில் பதுங்கு குழிகளை குறிவைத்து 21 ஆயிரம் பவுண்டு எடை கொண்ட வெடி குண்டை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது. எனினும் எப்ஓஏபி என்று அனைத்து குண்டுகளுக்கும் தந்தை என்று அழைக்கப்படும், அதாவது இந்த வெடிகுண்டை விட நான்கு மடங்கு அதிக சக்தி கொண்ட வெடி குண்டை ரஷ்யா தன் வசம் வைத்துள்ளது.
அமெரிக்காவின் தாய் வெடிகுண்டை 2003ம் ஆண்டு ப்ளோரிடாவில் எல்ஜின் விமானப் படையை சேர்ந்த ஆல்பர்ட் எல் வெய்மோர்ட்ஸ் என்பவர் தயாரித்தார். அணு சக்தி இல்லாத கடைசி வெடிகுண்டு என்று இது வடிவமைக்கப்பட்டது. இந்த குண்டு வெடித்தால் 20 மைல் தூரம் வரை இதன் புகை மூட்டத்தை பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் ரஷ்யாவின் தந்தை வெடிகுண்டு 2007ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. இது வெடித்தால் எரிபொருள் கலந்த காற்று கலவையை வெளிப்படுத்தும். கட்டங்களை தகர்ப்பதை தவிர்த்து அதிர்வுகள் நீங்கிய பிறகு இலக்கை குறி வைத்து தாக்கும். இது கிட்டத்தட்ட அணு ஆயுதத்தை போன்றதுதான் எ ன்றாலும் அதற்குறிய கதிர்வீச்சுகள் இதில் இருக்காது.
‘‘தாய்’’ வெடிகுண்டு டிரம்ப் பதவி ஏற்ற மூன்று மாதத்தில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் எம்சி 130 ரக விமானத்தில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் விமானப் படை சிறப்பு அதிகாரிகளின் உத்தரவுப்படி இது பயன்படுத்தப்பட்டுள்ளது. செயற்கைகோள் உதவியுடன் பயன்படுத்தப்பட்ட இந்த தாக்குதல் பலரது புருவங்களை உயர செய்துள்ளது. அதே சமயம் ரஷ்யாவின் ‘‘தந்தை’’ வெடிகுண்டை நோக்கி சர்வதேச பார்வை திரும்பியுள்ளது.