சங்கராபுரம்: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படை சோதனையில் சங்கராபுரம் அருகே பணம் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் நடைபெறாத மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தற்போது வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். சங்கராபுரம்- திருவண்ணாமலை சாலையில், மூங்கில் துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு வாகனத் தணிக்கை யில் ஈடுபட்ட அதிகாரிகள், சங்கராபுரம் நகரத்தைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி செல்வராஜ் என்பவரின் மகன் சரவணன் ஓட்டிவந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அவர் வைத்திருந்த கணக்கில் வராத ரொக்கப் பணமும், 1 கிலோ 804 கிராம் புதிய வெள்ளி நகைகள் மற்றும் 4 கிலோ 355 கிராம் பழைய வெள்ளி நகைகளும் கைப்பற்றப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது.