புதுடெல்லி:
மோடி அரசு கொண்டு வந்த கிராம மேம்பாடு திட்டத்தின் கீழ் கிராமங்களை தத்து எடுத்து, சீரமைத்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் திட்டத்தில் பா.ஜனதா கட்சி எம்.பிக்களை விட மாற்று கட்சி எம்.பிக்கள் சிறப்பாக செய்துள்ளதாக  ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதியஜனதா அரசு மத்தியில் ஆட்சி அமைத்தவுடன், பிரதமர் மோடி  சன்சாத் ஆதர்ஷ் கிராம் யோஜனா என்னும் கிராம வளர்ச்சித் திட்டத்தை  தொடங்கி வைத்தார்.
1-sansar
இந்த திட்டத்தின்படி நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு எம்.பி.யும்  3 கிராமங்கள் வரை தத்து எடுக்க வேண்டும். மொத்தம் 800 எம்.பி.க்கள் இவ்வாறு தத்து எடுத்தால் 2019-ஆம் ஆண்டில் 2,500 கிராமங்கள் வரை மேம்பாடு அடையும் என்பது இத்திட்டத்தின் நோக்கம்.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசியில் உள்ள ஜெயாப்பூர் என்ற கிராமத்தை, பிரதமர் நரேந்திர மோடி தத்தெடுத்திருந்தார்.  இந்நிலையில் கடந்த இரண்டாண்டுகளில் இத்திட்டப் பணிகளை பிரதமர், அவரது அமைச்சர்களைவிட மற்ற கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் சிலர் வெகு சிறப்பாக செய்துகொண்டிருப்பது இப்போது தெரிய வந்திருக்கிறது.
இத்திட்டத்தின் முதல் கட்டமாக 702 பாராளுமன்ற உறுப்பினர்கள் கிராமங்களைத் தத்தெடுத்திருந்தனர். அவர்களில் 646 பேர் தங்கள் திட்டத்துக்கான வரைவை சமர்ப்பித்திருந்தனர். கிராமப்புற மேம்பாட்டு துறை அமைச்சகம் கடந்த இரண்டாண்டுகளில் நடைபெற்ற திட்டப்பணிகளைப் பார்வையிட  47 கிராமங்களை தேர்வு செய்து அவற்றைப் பார்வையிட 32 அதிகாரிகளை உள்ளடக்கிய 16 குழுக்களை அனுப்பியது.
அந்த 47 கிராமங்களில் 24 பா.ஜ.க உறுப்பினர்களால் தத்தெடுக்கப்பட்டவை ஆகும். மக்களவை சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் மற்றும் நிதின் கட்கரி, தாவர் சந்த் கெலோட் மற்றும் ராஜூ ஆகிய மூன்று மட்டுமே அமைச்சர்களால் தத்தெடுக்கப்பட்டவை ஆகும். முன்னாள் கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரேந்த சிங் மற்றும் பிரதம்ர் மோடி தத்தெடுத்த ஜெயாப்பூர் கிராமங்கள் இந்த பட்டியலிலேயே இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
top villages
அதிகாரிகளின் குழு பார்வையிட்டதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 47 கிராமங்களில் மிக சிறப்பாக திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருப்பதாக 15 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்த கிராமங்களுக்கு அந்தந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களே நேரில் சென்றோ அல்லது ஒரு குழுவை ஏற்படுத்தியோ பணிகளை மேற்பார்வையிட்டதாக தெரியவருகிறது. இந்தப் எம்.பிக்கள் தாங்கள் கிராமங்களில் பொது சுகாதாரம், குடிநீர் விநியோகம், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நல உதவிகள், மின் விநியோகம், கல்வி வளர்ச்சி மற்றும் மதிய உணவு ஆகிய பணிகள் சிறப்பாக நடந்தேறுவதை உறுதி செய்துள்ளனர்.
இந்த 15 முன்மாதிரி கிராமங்கள் பற்றி விரைவில் ஒரு புத்தகமும், ஒரு ஆவணப்படமும் வெளியிட இருப்பதாக அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.