திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் பகுதியில் ஓடும் கண்டெய்னர் லாரி தீப்பிடித்ததில் ரூ.1.50 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. வீட்டு உபயோக பொருட்கள் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரியில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபலமான ஆன்லைன் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்துக்கு சொந்தமான சுமார் ஒன்றரை கோடி மதிப்பிலான பொருட்கள் கண்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு சாலை மார்க்கமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. லாரி திருவள்ளுர் மணவாளநகர் அடுத்த வெங்கத்தூர் பகுதியில் சென்ற போது கண்டெய்னரில் இருந்து புகை மூட்டமாக வந்துள்ளது.
இதுகுறித்து சாலையில் சென்ற மற்ற வாகனத்தினர், லாரி டிரைவருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கி கண்டெய்னரை பார்த்தபோது, தீ மளமளவென எரிந்துகொண்டிருந்தது. இதுகுறித்து அவர் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தார். தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த தீ விபத்தில், ரூ.1.50 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.