இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரில், ஒவ்வொரு போட்டியிலும் நிகழும் ரன்அவுட் குறித்த ஒரு சிறப்பு அம்சத்தை கவனிக்க வேண்டியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற அடிலெய்டு பகலிரவு டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கேப்டன் விராத் கோலி, நன்றாக நங்கூரமிட்டு ஆடி, 74 ரன்கள் எடுத்திருந்தபோது ரன்அவுட் ஆனார். இந்திய இன்னிங்ஸில் இந்த அவுட் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி, 244 ரன்களில் முடிவுக்கு வந்தது இந்திய இன்னிங்ஸ்.

அதன்பிறகு, மெல்போர்னில் நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், இந்தியாவின் தற்காலிக கேப்டன் அஜின்கியா ரஹானே மிகச்சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார். ஆனால், 112 ரன்கள் எடுத்திருந்தபோது ரன்அவுட் ஆனார். இதனால், 400 ரன்களை தொடலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய இன்னிங்ஸ் 326 ரன்களில் முடிந்துபோனது.

தற்போது, சிட்னி டெஸ்ட்டில் 131 ரன்களை எடுத்து கடைசிவரை மிரட்டிக் கொண்டிருந்த ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், ரன் அவுட் செய்யப்பட்டிருக்கிறார். இவர் கடைசி நேரத்தில்தான் செய்யப்பட்டிருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது. அதேசமயம், அந்த அவுட தவறவிடப்பட்டிருந்தால், ஆஸ்திரேலியாவின் கணக்கில் இன்னும் 20 ரன்கள் சேர்ந்திருக்கலாம்!

முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் மற்றும் மேத்யூ வேட் ரன்அவுட் ஆனது முக்கியமற்ற நிகழ்வுகள். ஆனால், இந்தியாவிற்கு ஏற்பட்ட 2 ரன்அவுட்டுகள் மிகவும் முக்கிய நிகழ்வுகள். தற்போது ஸ்டீவ் ஸ்மித் ரன்அவுட் ஆகியுள்ளதும் ஒரு சிறிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.