தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசியல் சூழ்நிலை காரணமாக ஆட்சிக்கு ஆபத்து தலைமேல் தொங்கும் கத்திபோல உள்ளது.
எடப்பாடி தலைமையிலான அரசுக்கு டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் இதுவரை எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மீண்டும் கூவத்தூர் குதிரைபேரம் நடைபெற்றால், ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் இதுவரை 4 முறை ஆட்சி கலைப்புகள் அரங்கேற்றம் நடைபெற்றுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சி இரண்டு முறையும், எம்.ஜி.ஆர். தலைமையிலான ஆட்சி ஒரு முறையும், ஜானகி தலைமையிலான ஆட்சி ஒருமுறையும் கலைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இந்திரா காந்தி அரசால் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப் பட்டபோது, தமிழ கத்தில் திமுக தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, இந்திராவுக்கு எதிராக குரல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து 1976 ஜனவரி 31-ம் தேதி கருணாநிதி தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டது.
பின்னர், எம்.ஜி.ஆர். தலைமயிலான அதிமுக அரசும், 1980-ம் ஆண்டு கலைக்கப்பட்டது.
1980-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், மாநிலத்தை ஆண்டு வந்த அதிமுக, இரண்டு இடங்களை மட்டுமே பெற முடிந்தது. இதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். தலைமையிலான ஆட்சியும் கலைக்கப்பட்டது.
பின்னர் 1987ம்ஆண்டு எம்.ஜி.ஆர் மறைவை தொடர்ந்து, அதிமுக இரு அணியாக உடைந்தது. அதிமுக ஜெ என்று ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியும், மறைந்த எம்.ஜி.ஆர். மனைவி ஜானகி தலைமையில் மற்றொரு அணியாகவும் பிரிந்தது. அதையடுத்து, ஜானகி தலைமையிலான ஆட்சி பதவிஏற்றது. அதையடுத்து சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடைபெற்ற வன்முறை காரணமாக 1988-ம் ஆண்டு, ஜானகி தலைமை யிலான ஆட்சி கலைக்கப்பட்டது.
அதையடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார்.
அப்போதைய திமுக ஆட்சியின்போது, ‘தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. அதற்கு தி.மு.க. ஊக்கமளிக்கிறது’ என தி.மு.க. மீது புகார் கூறப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் ஆசைக்கிணங்க, அப்போதைய முதல்வர் சந்திரசேகர், காங்கிரசின் வற்புறுத்தல் காரணமாக 1990-ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியை கலைத்து உத்தரவிட்டார்.
பரபரப்பாக பேசப்பட்ட இந்த கலைப்பு, மாநில ஆளுநர் அறிக்கை தராமலேயே மத்திய அரசு நேரடியாக, தமிழக அரசை கலைத்து உத்தரவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக, தமிழகத்தில் ஆட்சி கலையும் சூழல் உருவாகி உள்ளது.