சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

பாமரனுக்கு இருக்கும் சுய சிந்தனைகூட எல்லாம் வல்ல மீடியாக்களில் ஒரு தரப்புக்கு சில விஷயங்களில் சுத்தமாக இருப்பதில்லை. அதற்கு அற்புதமான உதாரணம் நடிகர் ரஜினி தொடர்பான செய்திகள்..

ஒருவர் அரசியலுக்கு வருவதை யாரும் குறைசொல்லமுடியாது. ஜனநாயக நாட்டில் அதனை தடுக்கவும் முடியாது. ஆனால் 22 வருடமாக ஒரு மனிதன் சளைக்கவே சளைக்காமல் அரசியலுக்கு வரப்போவதாக பம்மாத்து காட்டிக்கொண்டிருக்கிறார்.. நடப்பது பம்மாத்து என்பதைக்கூட மீடியாக்கள் எங்குமே அடையாளப் படுத்த மறுக்கின்றன என்பதுதான் விந்தையான ஒன்று.

இப்படிப்பட்ட மீடியாக்களை, தெரிந்தோ, தெரியாமலோ, கண்டுக்கவே கண்டுக்காமல் என்ன வேண்டுமானாலும் செய்திகளை போட்டுக்கொள்ளுங்கள் என்று போனவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா.. தற்போதும் போய்க்கொண்டிருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி. மீடியாக்களை மதிக்காத குணத்தில் மோடி, ஜெயலலிதா ஆகியோரைவிட நடிகர் ரஜினி  பத்து மடங்கு  உயர்வாக இருப்பார் என்பதை சொன்னால் பலருக்கும் புரியாது…

வசூல் சக்ரவர்த்திதியாக திகழும் ஒரு சூப்பர் ஸ்டார் எப்போதும், எல்லாவற்றையும் பற்றி மீடியாக்களிடம் பேச வேண்டிய அவசியம் இல்லை.. ஆனால் அரசியலுக்கு வரப்போகிறேன், வரப்போகிறேன் என்று அரசியல் அவதாரம் காட்டிக்கொள்ளும் ஒருவர் அப்படி இருக்க முடியாது.

அவருக்கு தேவைப்படும்போது  மட்டுமே அழைத்து வார்த்தை களை உதிர்த்துவிட்டு, பொறுக்கிக்கொண்டு போங்கள் என்கிற ரீதியில் சொல்லாமல் சொல்வார்.

ஆனால், இதே மீடியாக்கள் தங்கள் தேவைக்காக  கருத்து கேட்க விரும்பினால் அவரை எந்த கொம்பனாலும் தொடர்பு கொள்ளவே முடியாது..

சரி, அவர் பேசுவதைத்தான் சரியான வகையில் மீடியா எதிர்கொள்ளுமா என்றால் அதுவும் கிடையாது. இதில் ஒன்றுதான், கொள்கை என்னவென்று கேட்ட செய்தியாளனை பற்றி, ‘’ஒரு சின்னப்பையன் என்னைப்பார்த்து கொள்கை என்னன்னு கேட்டான்..எனக்கு அப்படியே ரெண்டு நிமிஷம் தலையே சுத்திப்போச்சு” என்று விமர்சித்த பிதற்றலான பேச்சு..

அரசியலுக்கு வரப்போகிறேன் என்று சொல்பவரிடம் உங்கள் கொள்கை என்ன வென்று கேட்காமல் உங்களை இளமைக்கால விளையாட்டுக்களை கொஞ்சம் சொல்லுங்களேன் என்றா கேட்பார்கள்?

தலைசுத்திப்போச்சு பேச்சை கடுமையாக விமர்ச்சித்திருக்கவேண்டிய ஊடகங்கள் அதனை செய்யவேயில்லை.. செய்யவும் செய்யாது. வெட்கமே இல்லாமல் ரஜினியின் உப்புச்சப்பில்லாத பேச்சுக்களை தலைப்பு செய்திகளாக போடும். நான்கு தினங்களுக்கு முன்புகூட 125 ஆண்டுகளுக்கும் மேல் பாரம்பரியம் கொண்ட இங்லீஷ் இந்து நாளிதழ், பெரிய அளவில் செய்தி போடுகிறது. என்னவென்று. ரஜினி விரைவில் கட்சியை ஆரம்பிப்பார் என்ற அவர்கள் மன்றத்து நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளதாக.

விரைவில் கட்சி ஆரம்பிப்பேன் என ரஜினியே சொல்லும்போதெல்லாம்  சொல்லும்போதே எல்லாரும் சிரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்த லட்சணத்தில் ரஜினி மன்றத்து நிர்வாகிகள் சொல்கிறார்கள் என ஹெட்டிங் கட்டுகிறார்கள்.

ஆனால், வாடகை விவகாரம் இருந்தாலும் சரி, கடன் மற்றும் பண மோசடி விவகாரமாக இருந்தாலும் சரி.. ரஜினி தரப்புக்கு எதிரான எந்த சர்ச்சையையும் குற்றங்களையும் எவரும் எழுப்ப மாட்டார்கள். நோண்டியெடுத்து அலசி உண்மையை வெளியே கொண்டு வர விரும்பவேமாட்டார்கள். இதற்கான காரணம், மிகவும் சுவாரசியமானது..

பல சேனல்களில், மிகப்பெரிய தலைவர்கள் போனில் அழைத்தால்கூட, சர்வ சாதாரணமாக பேசும் அனுபவம்மிக்க செய்தியாளர்கள் பணிபுரிவார்கள். ஆனால் அந்த சேனல்களின் முதலாளிகளின்  நிலைமை என்ன தெரியுமா? அத்தகைய சேனல் முதலாளிகள்,, ரஜினி வீட்டிலிருந்து உதவியாளர் போனில் அழைத்து பேசினாலே நாள் முழுவதும் புளங்காகிதப்பட்டுக்கொள்வார்கள்..

அன்றைய தினம் மட்டுமல்ல அடுத்து சில நாட்களுக்கு தங்களிடம் பேசும் அனைவரிடமும். தவறாமல், சார் ரஜினி சார் வீட்டுல இருந்து போன் வந்துச்சி என்று பேச்சினூடே சொல்லாமல் இருக்கவேமாட்டார்கள்.

இது இன்று நேற்று உருவான உளவியல் தாக்கம் அல்ல.. 1990-களில் உருவான தாக்கம். அப்போது, ரஜினி பற்றிய செய்தி என்றால், புதிய ஃபோட்டோ என்றால் போதும்.. புத்தக வியாபாரம் அமோகமாக இருக்கும். ரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரம் செல்லிங் பாயின்ட்டில் முக்கிய பங்கு வகித்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அது 24 மணிநேர செய்தி சேனல்கள் வராத காலகட்டம்.

ஏராளமான செய்திச்சேனல்கள் முளைத்து,தற்போது பெரும்பாலானவற்றின் மீது மோகமும் நம்பிக்கையும் குறைந்துவருகிறன்றன. இன்னொரு பக்கம் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் பெருகிவிட்டன. இந்த நிலையிலும் மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்கள் அதே ரஜினி மந்திரத்தை ஜபிப்பது எந்த பயனும் தரப்போவதில்லை. விமர்சிக்க வேண்டியதை விமர்சிக்காமல் நழுவிக் கொண்டேபோனால். பின்னடைவு சம்மந்தப்பட்ட மீடியாக்களுக்கே.

மீடியாக்களில் என்ன பில்டப் கொடுத்து சொல்லப்பட்டாலும் சமூக வலைத்தளங்களில் சரியான விமர்சனங்களால் போட்டு உடைத்துவிடுகிறார்கள்..

நிலைமை இப்படி இருந்தும், தனது மன்றத்து பெண்களிடம் ஆலோசனை நடத்திவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினியிடம் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.. என்னவென்று?.

”150 தொகுதிகளில், ரஜினிகாந்துக்கு ஆதரவு இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின் றனவே….?”

ரஜினி சிரித்துக்கொண்டே பதில்-.. ”அந்த செய்தி உண்மையாக இருந்தால் ரொம்ப சந்தோஷம்!”

” நடிகை எமி ஜாக்சனுடன் நெருக்கமாக உங்களை இணைத்து தகவல் உலா வருகிறதே?” எனறு ஒருவேளை செய்தியாளர் கேட்டிருந்தால், என்ன நடந்திருக்கும்?

எந்த ஆதாரத்தை வைத்து இப்படி அபாண்டமாய் கேவலமான கேள்வியை கேட்கிறீர்கள் என்று ரஜினி வெளுத்திருப்பார். இங்கே ரஜினியை குறைசொல்வதற்கு ஒன்றுமேயில்லை..  தனக்கு தேவைப்படும்போது மட்டும் மீடியாக்களை பயன்படுத்திக்கொள்ளும் அவருக்கு சாதகமான ஒரு பில்டப் கேள்வி என்றால், விட்டுவிடுவாரா என்ன?

ஆனால் மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்களின் போக்குதான் கவலைக்குரியதாக இருக்கிறது. தான் நினைத்ததை அப்படியே செய்தியாக பதிவேற்றிவிடும் சில சித்தரிப்பு கும்பலின் கைவண்ணத்தை மீடியா உலகமும் நம்பி பயணிப்பதை பார்த்தால் இதெல்லாம் எங்கே போய் முடியும் என்றே தெரியவில்லை.

வைகோ, சீமான், அன்புமணி, திருமாவளன் போன்றோர் சொல்லாதையெல்லாம், சிலர் அவர்களாகேவே கற்பனை செய்துகொண்டு சமூக வலைத்தளங்களில் எழுதிவிடுகிறார்கள். அது அப்படியே நம்பும் பலகீனமான கூட்டத்தால் வைரல் ஆகிவிடுகிறது.. படுமோசமான விமர்சனங்கள் கொடிகட்டிப்பறக்கின்றன. ஒருத்தரோடு ஒருத்தர் கொச்சை கொச்சையான வார்த்தைகளால் தாக்கி அசிங்கப்படுத்துகிறார்கள்.

அப்படியொரு சமூகவலைத்தள டுபாக்கூர் தகவல்தான், 150 தொகுதிகளில் ரஜினிகாந்துக்கு  ஆதரவு  இருப்பதாக உளவுத்துறை சொன்னதாய்  எவனோ ஒருத்தன் அவிழ்த்துவிடப்பட்ட பொய்..

எந்த உளவுத்துறை? மாநில கோஷ்டியா, மத்திய கோஷ்டியா?  தெரியாது.. தொகுதி வாரியா சர்வே எடுக்க உளவுத்துறை என்ன “Pre-Election Survey Methodology எக்ஸ்பர்ட்டுகளா?

நடிகர் ரஜினியை யார் யார் வெளிப்படையாகவும், ரகசியமாகவும் பார்க்கிறார்கள், , என்ன மாதிரி பேச்சு வார்த்தை ஓடிக்கிட்டு இருக்கு  என்பது போன்ற விவரங்களை வேண்டுமானால் உளவுத்துறை தகவல்களை திரட்டலாம்..

அரசியலுக்கே வராத ஒரு நபருக்கு இத்தனை தொகுதிகளில் ஆதரவு என கண்டுபிடித்து கிளப்பிவிடும் உலக மகா அதிசயம் தமிழ்நாட்டில்தான் உண்டு..

அப்போது ரஜினிக்கு ஆதரவு தராமல் மண்ணைக்கவ்வ வைக்கும் 84 தொகுதிகள் எவை? ரீல் விடறதுக்கு அளவே இல்லையா?

எதற்காக இப்படி ரஜினியை அரசியலில் நிலைநிறுத்த பில்டப் கொடுக்கப்படுகிறது என்பது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது..

ரஜினி, இன்றும் சினிமாவில் இருக்கிறார்.. கேட்டுப்பாருங்கள், திரையுலகினரிடம்.. அவர் படங்களில் பணியாற்றுகிறவரைத்தவிர அவரால் திரையுலகத்திற்கு வெறெந்த நடப்பு பிரயோஜனமும் கிடையாது என்றே பதில் கிடைக்கும்.. சமீபத்தில் திரைப்பட உலகில் 50க்கும் மேற்பட்ட நாட்கள் புதிய படங்கள் வெளியிடப்படாமல் வேலைநிறுத்தம் நடந்தது..அதைப்பற்றி ரஜினி என்ன சொன்னார்? தமிழகத்தின் நெம்பர் ஒன் கலைஞன் என்ற முறையில்  நெருக்கடியை தீர்க்க வெளிப்படையாக களமிறங்கினரா?

ஒன்று நிச்சயம், இன்று ரஜினி எதையும் செய்யாமல் சும்மா பேசிக்கொண்டிருக்கும் போதே அவரை வானத்துக்கு தூக்கிப்பிடிக்கும் இதே மீடியாக்கள், ஒரு வேளை ரஜினி அரசியலுக்கு வந்து, தொடர்ந்து ஆதரித்து சலித்துப்போனால், அடியோடு குணத்தை மாற்றிக் கொள்ளும். வேட்டை நாயாக மாறி 1972 – லிருந்து தோண்டி துருவியெடுத்து நெகட்டிவ் விமர்சனத்தில் முன்பைவிட பல மடங்கு வேகத்தில் வியாபாரத்தை செய்ய ஆரம்பிக்கும்.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், இனி ரஜினி அவராகவே கூப்பிட்டு பேட்டி கொடுக்கும்போது தவறாமல் மீடியா உலகம் ஒரு முக்கியமான கேள்வியை கேட்கட்டும்

‘’ரஜினி சார், மக்களிடம் அசைக்கமுடியாத செல்வாக்கு பெற்றிருக்கும் உங்களுக்கு இப்போது பிரதமாகும் வாய்ப்பும் பிரகாசமாக வந்திருக்கிறது.. அதனால் பிரதமர், முதலமைச்சர் இந்த இரண்டில் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?

ரஜினியும் சொல்வார், ‘’விரைவில் கட்சி ஆரம்பித்த பிறகு அது பற்றி முடிவெடுப்பேன்’’