மாநில வாரியாக ஒவ்வொரு மருத்துவமனையிலும் மார்ச் 2021 முடிய எத்தனை படுக்கை வசதிகள் உள்ளன என்று கேட்டு மத்திய சுகாதாரத் துறைக்கு அனுப்பிய கேள்விக்கு விலாசம் முதல் அனைத்து தகவல்களும் இந்தியில் வந்ததால் அந்த தபாலை பட்டுவாடா செய்ய முடியாமல் திணறிய விவகாரம் இப்போது பேசுபொருளாகி இருக்கிறது.
இந்த கேள்வியை மருத்துவமனைகளுக்கு அனுப்பிய மத்திய சுகாதாரத் துறை அதற்கான பதிலையும் சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தியிருந்தது.
இது குறித்து பதிலளித்த டெல்லியைச் சேர்ந்த கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனை, அந்த பதிலை இந்தியில் தயாரித்து அனுப்பியதுடன், விலாசத்தையும் இந்தியிலேயே எழுதி இருந்தது.
பின்கோட்-ஐ கொண்டு சம்பந்தப்பட்ட தபால் நிலையத்திற்கு வந்து சேர்ந்த கடிதம் எந்த விலாசத்திற்கு செல்லவேண்டும் என்பது யாருக்கும் புரியாமல் இருந்த நிலையில், அதில் ஆர்.டி.ஐ. என்று குறிக்கப்பட்டிருப்பதைப் பார்த்த போஸ்ட்மேன் ஒருவர் தனது பகுதியைச் சேர்ந்த தயானந்த கிருஷ்ணன் என்பவர் அடிக்கடி இது போன்று ஆர்.டி.ஐ. க்கு கடிதம் எழுதுவதை அறிந்ததால் அவரிடம் கொண்டு சென்றார்.
தயானந்த கிருஷ்ணன்னும் இது தனக்கான கடிதம் தான் என்று அதைப் பெற்றுக்கொண்டார். மேலும் தான் ஆங்கிலத்தில் அனுப்பிய கடிதத்திற்கு இதுபோல் இந்தியில் பதிலளித்திருப்பது குறித்து மத்திய அரசை விளக்கம் கேட்டிருக்கிறார்.
ஏற்கனவே, தென்காசியைச் சேர்ந்த ஆர்வலர் ஒருவர் அனுப்பிய கேள்விக்கு இதேபோல் இந்தியில் பதிலனுப்பி இருந்ததைச் சுட்டிக்காட்டிய தயானந்த் கிருஷ்ணன்.
மாநில மொழியிலோ ஆங்கிலத்திலோ தகவலறிய உரிமையில்லாமல் இருக்கும் தகவலறியும் உரிமை சட்டத்தை மாற்றி மத்திய அரசையும் ஒன்றிய அமைச்சகங்களையும் ஆங்கிலத்தில் பதிலளிக்க வேண்டும் என்று மாநில அரசு வலியுறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.